Published : 16 Dec 2018 06:27 PM
Last Updated : 16 Dec 2018 06:27 PM

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார்.

 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், தலைவர் ராகுல் காந்தியும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் சென்னை வந்தனர்.

 

இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை சரியாக மாலை 5.18 மணிக்கு திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, அண்ணா சிலையும் திறக்கப்பட்டது.

 

 

இந்த நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் க.அன்பழகன் வரவேற்றார். துரைமுருகன், ஜெ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.

 

பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா, திக தலைவர் வீரமணி, மதிமுக தலைவர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா, காங்கிரசை சேர்ந்த ப சிதம்பரம், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், குஷ்பு, தமாகாவை சேர்ந்த ஜிகே வாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, வடிவேல், விவேக் உள்பட பலரும் பங்கேற்றனர்.

 

சிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு தலைவர்கள் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். தற்போது தலைவர்கள் நிகழ்ச்சியில் பேசத் தொடங்கியுள்ளனர்.

 

கருணாநிதி சிலையை வடிவமைத்த சிற்பி தீனதயாளனுக்கு ஸ்டாலின் மோதிரம் அணிவித்து மரியாதை செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x