Published : 16 Dec 2018 04:18 PM
Last Updated : 16 Dec 2018 04:18 PM

சோனியா பேனரை அகற்றுக: பரங்கிமலையில் டிராபிக் ராமசாமி போராட்டத்தால் பரபரப்பு

சென்னை, பரங்கிமலையில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பேனரை அகற்றக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போராடியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

 

பேனர்கள், கட் அவுட்களை சாலையின் ஓரங்களில் குறிப்பாக நடைமேடைகளில் நடக்க முடியாமல் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் வைப்பது அரசியல் கட்சிகளின் வாடிக்கை, இதனை எதிர்த்து டிராபிக் ராமசாமி போராடி வருகிறார், சிலபல வழக்குகளையும் அவர் சந்தித்துள்ளார், இதனால் போலீஸ் நடவடிக்கைக்கும் அவர் ஆளாகியுள்ளார்.

 

இந்நிலையில், கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வருகை தர உள்ளனர்.

 

அவர்களை வரவேற்று விமானநிலையத்தில் இருந்து கத்திபாரா பாலம் வரை காங்கிரஸ் கட்சியினர் பேனர்கள் வைத்து உள்ளனர். அனுமதி பெறாமல் பேனர்களை வைத்ததாக கூறியும் அதை அகற்ற கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று போராட்டம் நடத்தினார்.

 

ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பரங்கிமலை தாபால் நிலையம் அருகே ரோட்டில் பிளாட்பாரத்தில் அமர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், ஆலந்தூர் பகுதி செயலாளர் சீதாபதி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 

அங்கு பரங்கிமலை போலீஸ் உதவி கமி‌ஷனர் கோவிந்த ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் வந்தனர். போலீசாரிடம் அனுமதி பெற்று பேனர்கள் வைத்ததாக காங்கிரசார் தெரிவித்தனர். அதையடுத்து டிராபிக் ராமசாமியுடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x