Published : 16 Dec 2018 01:53 PM
Last Updated : 16 Dec 2018 01:53 PM

சிலை வைக்க கடைசிவரை தடைப்போட்ட கருணாநிதி: சிலைத் திறப்பு ஒரு மீள்பார்வை

இன்று அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது. தான் உயிருடன் இருக்கும்வரை தனக்கு சிலை வைப்பதில் கடும் எதிர்ப்பைக்காட்டி மறுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. ஏன்? அவரது மனதை பாதித்த நிகழ்வு குறித்த மீள்பார்வையே இது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் இன்று மாலை திறக்கப்பட உள்ளது. தனக்கு சிலை வைப்பதை கடைசிவரை கருணாநிதி அனுமதிக்கவில்லை.

இதன் பின்னணியில் அவரது மனதை பாதித்த நிகழ்வு உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் உயிருடன் இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர் ஒன்று காமராஜர் மற்றொன்று கருணாநிதி.

சிலை அமைக்கப்பட்டு மீண்டும் புதிய சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர். ஒன்று கருணாநிதி மற்றொன்று ஜெயலலிதா. இப்படி சிலை வரலாற்றிலும் போராட்ட வரலாறு மறைந்த திமுக தலைவருக்கு உண்டு.

இன்று திறக்கப்படுவது அவரது மறைவுக்குப்பின் அமைக்கப்படும் சிலை, ஆனால் அவர் உயிருடன் இருந்தபோதே 43 ஆண்டுகளுக்கு முன் சிலை அமைக்கப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டதும், அவரது சிலை இடித்து தள்ளப்பட்டதும் குறித்து ஒரு தொகுப்பு:

கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். அதற்கு முன் உயிருடன் இருந்தவர்களில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே சிலை திறக்கப்பட்டிருந்தது.

அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது.

பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார்.

அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.

அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) க.அன்பழகன், மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி.க.சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார்.

திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது என்று பேசினார். சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் சிலையைத் திறந்து வைத்தார். இளமையான தோற்றத்துடன் மேடையில் பேசுவதுபோன்று கையை மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அமைக்கப்பட்ட தத்ரூபமான சிலை அது. அதன் பின்னர் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஜிஆர் மறைந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் கருணாநிதியின் சிலையை சில விஷமிகள் கடப்பாரையால் இடித்துத் தள்ளினர்.

சிலையை உடைத்ததைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட கருணாநிதி அந்தப்படத்தை முரசொலியில் வெளியிட்டு "உடன் பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை- நெஞ்சிலே தான் குத்துகிறான், அதனால் நிம்மதி எனக்கு. வாழ்க! வாழ்க!'' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பின்னர் அதே இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் சிலை அமைக்க முயற்சி எடுத்தபோது மனதை பாதித்த அந்த நிகழ்வால் கருணாநிதி அதைத் தடுத்துவிட்டார். இதையடுத்து தி.க.வினர் மீண்டும் சிலை அமைக்கும் முயற்சியைக் கைவிட்டனர்.

இந்நிலையில் கருணாநிதி மறைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் சிலை அமைக்கப்படும் என்று தி.க.தலைவர் வீரமணி சமீபத்தில் அறிவித்திருந்தார். மீண்டும் அதே இடத்தில் சிலை கம்பீரமாக எழுந்து நிற்கும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே அவரை நேசித்த தமையன் கருணாநிதியின் சிலை அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து அதற்கான செயலிலும் இறங்கினார். வேக வேகமாக சிலை அமைக்கும்பணி நடந்தது. அதை பலமுறை நேரில் பார்வையிட்டு திருத்தங்கள் கூறி சரியான முறையில் தத்ரூபமாக கொண்டுவரும் செயலில் ஸ்டாலின் செயல்பட்டார்.

சிலையை திறக்க சோனியா காந்தியை அழைக்க அவரும் ஒப்புக்கொண்டு இன்று சிலை திறக்கப்படுகிறது. அகில இந்திய தலைவர்கள் சிலை திறப்புவிழாவில் பங்கேற்கின்றனர்.

தனக்கேற்பட்ட கசப்பான நிகழ்வினால் தாம் உயிருடன் இருக்கும் வரை சிலை திறக்க கருணாநிதி அனுமதிக்கவில்லை. அவர், மறைந்தபின்னர் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவரது சிலை இன்று திறக்கப்படுகிறது.

 

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x