Published : 16 Dec 2018 12:42 PM
Last Updated : 16 Dec 2018 12:42 PM

பாத்திரத்துடன் வந்தால்தான் இனிமேல் பார்சல் சாப்பாடு: பாலிதீன் பை பயன்பாட்டை தவிர்க்க ஹோட்டல்கள் புதிய கட்டுப்பாடு 

மதுரை

தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை முழுமையாக அமலுக்கு வருகிறது. மருந்துகள், பால், குடிநீர் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து பிளாஸ்டிக் தடையை கட்டாயம் அமல்படுத்த அனைத்து உள் ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த வாரம் முதலே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாநகராட்சி தடை விதித்து, அதனை பயன்படுத்தும் ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதிப்பதுடன் நோட்டீஸ் வழங்கி எச்சரித்து வருகின்றனர். அதனால், மதுரையில் 50 சதவீதம் வரை பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இறைச்சிக் கடைகள், ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட் மற்றும் வணிக நிறுவனங்களில் தற்போது பாலிதீன் பைகளுக்கு பதிலாக தற்போது துணிப் பைகள், காகிதப் பைகளை வாடிக்கை யாளர்களுக்கு வழங்கத் தொடங்கி உள்ளனர். இதுவரை பாலிதீன் பைகளை பயன்படுத்திவிட்டு தற் போது ஒரே நேரத்தில் மற்ற பொரு ளில் தயாரிக்கப்படும் பைகளுக்கு மாறியுள்ளதால் அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதனால், மாநகராட்சி பகுதி யில் பெரும்பாலான ஹோட் டல்களில் பார்சல் சாப்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுவாக ஹோட்டல்களில் பார்சல் சாப் பாடு வாங்க கூட்டம் அதிகம் இருக்கும். சிறிய, பெரிய டீக் கடைகளில் டீ, காபி போன்ற பானங்களையும் பாலிதீன் பை களில் வழங்குவர். தற்போது பில் போடும் இடத்திலேயே வாடிக்கையாளர்களிடம் பார்சல் சாப்பாடு வாங்க பாத்திரம் கொண்டு வந்துள்ளீர்களா, அல்லது துணிப்பை கொண்டு வந்துள்ளீர்களா எனக் கேட்டு விட்டுத்தான் பில் போடு கின்றனர்.

சைவம் மற்றும் அசைவம் பார்சல் சாப்பாட்டில் குழம்பு, ரசம், பொரியல் உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை முன்பு சிறு, சிறு பாலிதீன் கவர்களில் வைத்து தருவர். தற்போது பொரியல், குழம்பு வகைகளை பாத்திரங்கள் இல்லாமல் வழங்க முடியாது.

இந்நிலையில், பாலிதீன் பைகளை கட்டாயம் பயன் படுத் தக்கூடாது என்று மாநகராட்சி கெடு பிடி காட்டுவதோடு 100 வார்டு களிலும் வணிக நிறு வனங் களை கண்காணிக்க ஒரு மண்டலத்துக்கு சுகாதார ஆய் வாளர்கள் தலைமையில் தலா 20 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.

இவர்கள், ஹோட்டல்களில் திடீர் சோதனை நடத்தி அந்த இடத்திலேயே ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள். அதனால் மதுரையில் தற்போது பார்சல் சாப்பாடு கேட்டுவரும் வாடிக்கையாளர்கள் பாத்திரம் கொண்டு வந்தால் மட்டுமே பார்சல் சாப்பாடு வழங்குவது என்ற முடிவுக்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் வந்துள்ளனர்.

டீக்கடைகளிலும் இதேபோல முடிவு எடுத்துள்ளனர்.

ஆனால், ஒரு சில ஹோட்டல்களிலும், நகரில் உள்ள நூற்றுக்கணக்கான புரோட்டாக் கடைகளிலும் விதிமீறி தற்போது வரை பாலிதீன் பைகளில் உணவு பதார்த்தங்கள், குழம்புகளை அடைத்து தருகிறார்கள். வரும் 1-ம் தேதிக்கு பிறகு கெடுபிடி அதிகமாகி விட்டால், அவர்களும் பாலிதீன் பயன்பாட்டை நிறுத்தி விடும் சூழலுக்கு தள்ளப்படுவது உறுதி.

அதனால், எளிதில் மக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு பைகள், கப்புகள் உற் பத்தி செய்யும் சிறு, குறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு மானியம், வரிவிலக்கு அளிக்க முன் வரவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியு றுத்துகின்றனர்.

டாஸ்மாக் பாரில் தாராளம்

அரசு டாஸ்மாக் பார்கள், பெட்டிக்கடைகள், சாதாரண சாலையோர டீக் கடைகளில் தற்போதும் தாரளமாக பிளாஸ்டிக் கப்புகள், பாலிதீன் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் மது அருந்த, பாலிதீன் பாக்கெட்டுகளில் தண்ணீர், பாலிதீன் கப் ஆகியவற்றை தாராளமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் கடைகளில் கிலோ கணக்கில் பாலிதீன் கழிவுகள் சேகரமாகின்றன. அவற்றை அவர்கள் அருகேயுள்ள நீர்நிலைகள், கழிவுநீர் கால்வாய்களில் சத்தமில்லாமல் போட்டுவிட்டுச் செல்வதால் சுகாதாரக்கேடு பரவி வருகிறது.

ஹோட்டல்கள், மற்ற வணிக நிறுவனங்களில் வழக்கமாக ஆய்வுசெய்யம் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு டாஸ்மாக் பார்களில் சோதனைக்கு செல்வதில்லை. அதனால் அங்கு பாலிதீன் பயன்பாடு தாராளமாக உள்ளது. இதைத் தடுக்க அதிகாரிகள் டாஸ்மாக் பார்களிலும் ஆய்வு செய்து பாலிதீன் பயன்பாட்டை தடுக்க வேண்டும். மாநகராட்சி ஆணையர் இதில் கூடுதல் கவனம் செலுத்தி பாலிதீன் பயன்பாட்டை முழுவதும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x