Published : 16 Dec 2018 09:15 AM
Last Updated : 16 Dec 2018 09:15 AM

தமிழ் மொழி இருக்கும் வரை கருணாநிதியின் புகழ் நிலைத்து நிற்கும்: முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் கருத்து

தமிழ் மொழி இருக்கும் வரை கருணாநிதியின் புகழ் நிலைத்து நிற்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் முழுஉருவ சிலை அக்கட்சியின் தலைமை யகமான அறிவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்படுகிறது. சிலை திறப்புவிழாவை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் நேற்று வெளியிட்ட கவிதை வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெருஞ்சிக்காட்டில் இருந்த தமிழை குறிஞ்சிக்காட்டில் குடிய மர்த்திய கோமான் கருணாநிதி. பனை ஓலையில் படுத்துக்கிடந்த தமிழுக்கு பச்சை ரசம் பாய்ச்சிய வர். சமூகப் புரட்சி, அரசியல் புரட்சி, ஆன்மிக புரட்சி மூன்றை யும் தன்னிடத்தில் கொண்டிருந் தவர். சிந்தனை, எழுத்து, பேச்சு, உரையாடல் என அவர் எந்த வடிவத்தில் கருத்து வெளியிட்டா லும் அங்கு பகுத்தறிவு இருக்கும். நகைச்சுவையும் இருக்கும். ஒரு கோடி பக்கங்களுக்கு மேல் தன் கைகளால் எழுதிய ஒரே தலைவர். இலக்கியத்தில் யாரும் எட்டமுடியாத உச்சத்தை எட்டியவர்.

மேடைத் தமிழை ஓடைத் தமிழாய் ஓடவிட்ட சொல்லழகர். கருணாநிதி இல்லாமல் தமிழக வரலாறு இல்லை. கோட்டையில் இருந்தாலும் கோபாலபுரத்தில் இருந்தாலும், தான் ஒடுக்கப் பட்டவர்களின் தலைவர் என்பதை ஒருபோதும் மறக்காதவர். அவரது மோகனத் தமிழையே மூச்சாக கொண்டு சுவாசித்தவர்கள் நாங்கள்.

போலித்தனம் இல்லாமல் இம்மண்ணை நேசித்தவர். அரிசி விலை தெரியாதவனுக்குக்கூட அரசியல் வலை வீசக் கற்றுத்தந்த அரசியல்ஞானி அவர். தமிழ்மொழி இருக்கும்வரை கருணாநிதியின் புகழ் நிலைத்து நிற்கும். சங்க இலக்கிய தமிழை சாதாரண மனிதருக்கும் சொந்தமாக்கியது கருணாதியின் பேனா.

பண்டிதர்கள் மத்தியில் இருந்த தமிழை பாமரர் மத்தியில் கொண்டுவந்தவர் அவர். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி, பகுத்தறிவாதி, நாடக ஆசிரியர், சிறுகதை, திரைப்படம் என அவர் பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தார். அவரது பேனா காலமெல்லாம் கருத்தரித்துக் கொண்டே இருந்தது.

திராவிட இயக்கத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றவர் கருணாநிதி. அவர் பெரியார், அண்ணா இருவரின் கலவை. அவர் ஒரு சகாப்தம். தமிழர்களுக்கு இலக்கணம், வீரம், காதல், பகுத்தறிவு, நேர்மை, கவிதை அனைத்தும் மொத்தமாக தேவைப்பட்டபோது கிடைத்தவர் கருணாநிதி. அவரின் மறுமதிப்பாய் நூற்றாண்டு திராவிட இயக்க வரலாற்றை தன் தோளில் சுமந்து கொண்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் நாளைய தமிழகத்துக்கு ஒளி கொடுப்போம்.

இவ்வாறு ஜெகத் ரட்சகன் கூறியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x