Published : 15 Dec 2018 07:27 PM
Last Updated : 15 Dec 2018 07:27 PM

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்; தமிழக அரசின் கபட நாடகம்; ஸ்டெர்லைட் தீர்ப்பு வைகோ குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் காலம் வரத்தான் போகிறது, தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆதர்ஸ்குமார் கோயல், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரகுவேந்திர ரத்தோர், கே.ராமகிருஷ்ணன் மற்றும் இரண்டு சுற்றுச் சூழல் நிபுணர்கள் என ஐந்து பேர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

டிசம்பர் 10-ம் தேதி அன்று ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை முடிந்து, டெல்லியில் நான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு ஒரு வாரத்திற்குள் இந்தப் பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கும். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக, எப்படியும் ஆலையை திறக்க வேண்டும் என்ற முடிவோடு நீதிபதி கோயல் அமர்ந்திருக்கிறார் என்பதைத் தீர்ப்பாயத்திலேயே அன்று என் வாதத்தின்போது சூசகமாகச் சுட்டிக்காட்டினேன்.

“நீதிபதி அவர்களே, நீங்கள் முன்கூட்டியே ஒரு முடிவெடுத்துக்கொண்டு விசாரணையை நடத்துகிறீர்கள். நீங்கள் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறீர்கள் என்பதை என்னால் யூகிக்க முடியும். உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள் இந்திய நீதித்துறையைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை வெளியில் உள்ள சக்திகள் ரிமோட் கன்ட்ரோலில் இயக்கின” என்றார்.

இன்று நாட்டில் பல நீதிமன்றங்களில் இதுதான் நடக்கிறது’ என்று கூறியபோது, தீர்ப்பாய நீதிபதி கோயல் எந்தப் பதிலும் சொல்லவிலலை. உச்சநீதிமன்றத்தில் இவர் ஓய்வு பெற்ற நாள் அன்றே தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதிலிருந்தே தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை நாம் யூகித்துக்கொள்ளலாம். தீர்ப்பாயம் நியமித்த உண்மை கண்டறியும் குழுவின் தலைவர் முன்னாள் மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தருண் அகர்வால் அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில், 17 பக்கங்கள் என் வாதங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

தூத்துக்குடி மாநகர் சுற்றுச் சூழல் நச்சுமயம் ஆவதற்கு ஆலையின் புகை போக்கி வெளியிடும் நச்சுப் புகைதான் காரணம். 1986 இல் மத்திய அரசு நிறைவேற்றிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி ஸ்டெர்லைட் ஆலையின் புகைபோக்கியின் உயரம் 99.6 மீட்டராக இருக்க வேண்டும். ஆனால் 60 மீட்டர்தான் இருக்கிறது.

இதனால்தான் இத்தனை ஆண்டுகளும் மக்கள் நச்சுப் புகையைச் சுவாசித்து உடல்நலம் பாழாகி, சுற்றுச் சூழல் நாசமாகியது என்ற எனது கருத்தை ஏற்றுக்கொண்டதால்தான் நீதிபதி தருண் அகர்வால் புகைபோக்கியின் உயரத்துக்கு ஏற்றவாறு உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.

உடனடியாக இதைச் செய்ய முடியாது, பெருமளவு பணம் செலவாகும் என்றது ஸ்டெர்லைட் ஆலை. இதுமட்டுமல்லாமல் நான் எடுத்து வைத்த பல வாதங்களைத் தீர்ப்பில் கோயல் குறிப்பிடவே இல்லை. இந்தத் தீர்ப்பு ஸ்டெர்லைட் நிர்வாகமே எழுதி வெளியிட்டது போன்று தெரிகிறது.”

ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு முழுக்க முழுக்க அதிமுக அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமுமே காரணமாகும். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே இவர்கள் செயல்பட்டு வந்ததால்தான், ஸ்டெர்லைட் வழக்கறிஞர் அதனையே தனக்கு சாதகமாக்கி வாதங்களை எழுப்ப முடிந்தது.

மே 22 ஆம் தேதி அண்ணா திமுக அரசின் திட்டப்படி தமிழக காவல்துறை தூத்துக்குடியில் ஒரு ஜாலியன் வாலாபாக்கை நடத்தி சிறுமி, தாய்மார்கள் உட்பட 13 பேரை கோரமாகப் படுகொலை செய்தது. மக்கள் கொந்தளிப்பு எரிமலையாகும் என அஞ்சி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஆலையை மூடுவதாக தமிழ்நாடு அரசு கண்துடைப்பு நாடகம் நடத்தியது.

அதனால்தான் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நான் தொடுத்த வழக்கில், “ஸ்டெர்லைட் பிரச்சினையில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” என்று மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் கூறியதை நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டு, தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனக் கோரினர்.

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என செயல்படும் அதிமுக அரசு, ஸ்டெர்லைட் பிரச்சினையில் கொள்கை முடிவு எடுக்கவில்லை. அதனையே சுட்டிக்காட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆணையை வைத்து ஆலையை மூட முடியாது என்றும் தீர்ப்பாய நீதிபதி கோயல் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை என்பது தூத்துக்குடி மக்களுக்கு உயிர் குடிக்கும் எமனாகும். தீர்ப்பாயம் தந்த தீர்ப்பை எதிர்த்து நான் உச்சநீதிமன்றம் செல்வேன். ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியிலிருந்து அகற்றப்படுவதை வருகிற காலம் காணத்தான் போகிறது.”

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x