Published : 15 Dec 2018 03:43 PM
Last Updated : 15 Dec 2018 03:43 PM

சென்னைக் காவலர்கள் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி: ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் சென்றனர்

சென்னை பெருநகர காவல் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியாக 1,300 ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விசுவநாதன் உத்தரவின்பேரில், இருசக்கர வாகன ஓட்டிகள் அவசியம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவசியம் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காவலர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஹெல்மட் அணிவது ஒரு இயக்கமாக மாற வேண்டும், ஹெல்மட் அணியாத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். ஹெல்மட் பற்றிய விழிப்புணர்வுக்கு காவல்துறை முன்னுதாரணமாக இருக்கவேண்டும் அதற்காக கட்டாயம் ஹெல்மட் அணியவேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், இன்று காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை பெருநகர காவல் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இன்று காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை ஆணையாளர்கள் கே.செளந்தராஜன் மற்றும் ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஆயுதப்படை உதவி ஆணையர் திருவேங்கடம், ஆய்வாளர்கள் மற்றும் சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் சுமார் 1,300 ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

காவலர்கள் தலைக்கவசத்தை தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, இனி இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்லும்போதும், பின்னால் அமர்ந்து செல்லும்போதும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்வதாக உறுதிமொழி மேற்கொண்டனர்.

பின்னர் சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் இருசக்கர வாகனங்கள் தலைக்கவசம் அணிந்து கொண்டு ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து ருக்மணி லஷ்மிபதி சாலை, பாந்தியன் சாலை, எத்திராஜ் கல்லூரி வழியாக பேரணியாக சென்று தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினர். இந்த பேரணியில் ஜிப்சி பேட்ரால் வாகனங்களில் காவலர்கள் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x