Published : 15 Dec 2018 02:54 PM
Last Updated : 15 Dec 2018 02:54 PM

சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “சென்னை ஐஐடி உலக அளவில் புகழ் பெற்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமாகும். இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும், ஏராளமான வெளிநாட்டு மாணவர்களும் பயின்று வருகின்றனர். பல்வேறு நவீன ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிறுவனத்தில் பயின்ற பலர் உலகப் புகழ்வாய்ந்த அறிவியல் தொழில் நுட்ப அறிஞர்களாக திகழ்கின்றனர். ஆனால், இக்கல்வி நிறுவனத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சாதிய ரீதியான பாகுபாடுகள், இந்நிறுவனத்தின் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடும், குறிப்பாக தலித் மாணவர்களுக்கு எதிரான தீண்டாமைப் போக்கும் சங் பரிவார அமைப்புகளால், அதன் மாணவர் அமைப்பால் உருவாக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாகவே சென்னை ஐஐடியிலும் சாதிய பாகுபாடு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. மத்திய பாஜக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் 'இந்துத்துவா' கருத்தியல் அடிப்படையிலான செயல்பாடு இதற்குப் பின்புலமாக இருக்கிறது.

இந்நிலையில், தற்பொழுது, சென்னை ஐஐடி உணவுக்கூடத்தில் சைவ உணவு உண்போருக்கும் அசைவ உணவு உண்போருக்கும் தனித்தனியான நுழைவு வாயிலும், வெளியேரும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளன. உணவை உண்பதற்கு தனித்தனியான தட்டுகளும் ,பாத்திரங்களும் வழங்கப்படுகின்றன. கை கழுவும் இடங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அதை அறிவிக்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை ஐஐடி நிர்வாகத்தின் இச்செயல் அப்பட்டமான சாதிய பாகுபாடாகும். பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கும், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மற்றும் பட்டியல் பழங்குடியின சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரான இச்சாதிய ரீதியான பாகுபாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது. .சாதிய பாகுபாட்டை கடைபிடிக்கும் இக்கல்லூரி நிர்வாகம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x