Published : 15 Dec 2018 02:58 PM
Last Updated : 15 Dec 2018 02:58 PM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வேதாந்தாவின் வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது..

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்த ஸ்டெர்லைட் ஆலையை தடைச்செய்யக்கோரி போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் 100 வது நாள் அமைதிப்பேரணியில் கலவரம் வெடித்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

தமிழகம் தாண்டி இந்தியாவையே உலுக்கிய துப்பாக்கிச்சூடு விவகாரத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்தனர்,

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டப்பேரவையை கூட்டி தீர்மானமாக நிறைவேற்றி சட்டமாக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோது அரசு மறுத்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக இயங்க உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. ஸ்டெர்லைட் ஆலையை ஜனவரியில் திறப்போம் என வேதாந்தகுழும தலைவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலையை திறப்பது குறித்த வழக்கு நடந்துவந்தது.

வேதாந்தாவின் வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வாலா குழு மூலம் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டதன்பேரில் ஆய்வு நடைப்பெற்றது. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்கலாம் என தருண் அகர்வாலா குழு பரிந்துரை செய்திருந்தது.

ஸ்டெர்லைட் வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வாதாடி வந்தனர். இந்நிலையில் இன்று பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது தீர்ப்பில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது என்று தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தருண் அகர்வாலா குழுவின் பரிந்துரையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து.

துண்டிக்கப்பட்ட மின்சாரத்தையும் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் போது மாவட்ட ஆட்சியர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும்.

தூத்துக்குடியில் நலத்திட்டங்களை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் 3 ஆண்டுகளில் ரூ.100 கோடி செலவு செய்ய வேண்டும்.

தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை வகுக்க பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.

ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்த விவரங்களை நாள்தோறும் வெளியிட வேண்டும்.

விபத்து நேர்ந்தால் தடுப்பு நடவடிக்கை குறித்த திட்ட அறிக்கையை வழங்க வேண்டும்.

நிலத்தடி நீரின் தன்மை குறித்து இணையதளத்தில் தினசரி பதிவேற்ற வேண்டும்.

ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை தினசரி கண்காணிக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலைக்கு உத்தரவாக தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x