Published : 15 Dec 2018 02:13 PM
Last Updated : 15 Dec 2018 02:13 PM

சேலம்- சென்னை பசுமை வழிச்சாலைக்கு 15% மக்கள் மட்டுமே எதிர்ப்பு: முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு 15% மக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை), சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மேகேதாட்டு அணைப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கின்றாரே?

50 ஆண்டு காலமாக இருக்கும் காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, அண்மையில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தெளிவான தீர்ப்பை, காவிரிப்படுகையில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பின்பற்ற வேண்டுமென்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு.

உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறதே?

நிராகரிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால் அதற்குத் தேவையான விளக்கம் கேட்டு, அதன்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும்.

எதிர்கால நலன் கருதி 8 வழிச் சாலை நிறைவேற்றப்படும் என்று சொல்லியிருக்கின்றீர்கள்? ஆனால், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களே?

இந்தியாவின் இரண்டாவது பசுமைவழிச் சாலை தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது, ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதி, அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் நிலம் கையகப்படுத்தும்பொழுது, குறைந்த அளவில் இழப்பீட்டுத் தொகை கொடுத்தார்கள்.

ஆனால், இப்பொழுது அப்படியல்ல, விவசாயிகளுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்வதால், சாலை, உட்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியம்.

வெளிநாடுகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பே, 8 வழிச்சாலை, 10 வழிச்சாலை என்று ஏற்படுத்தி, தொழில் வளம் பெருகி, சிறப்பான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கை தமிழகத்திலும் அமைய வேண்டுமென்றுதான் தமிழக அரசு விரும்புகிறது.

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். யாரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவது நோக்கமல்ல. ஆனால், மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் கடமை.

4 வழிச்சாலையிலேயே எங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்களே?

அது தவறானது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. ஏற்கெனவே, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, நீதிமன்றத் தீர்ப்பின்படி அவர்கள் வழங்குகின்றார்கள். இது இன்று, நேற்றல்ல,, திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நிலம் எடுப்பு, அப்பொழுது ஒவ்வொருவரும் ஒரு வழக்கு போட்டார்கள், நிலத்தின் வழிகாட்டு மதிப்புக்கு அதிகமாக இழப்பீட்டுத் தொகை கேட்டு நடைபெற்ற சம்பவம் அது.

தற்பொழுது அப்படியல்ல, அரசாங்கம் நிலத்திற்குத் தேவையான அனைத்து இழப்பீட்டுத் தொகையையும் வழங்கவிருக்கிறது. தென்னை, மாமரம், வீடு, நிலம் ஆகியவற்றிற்கு இழப்பீடு தருகிறோம். அரை ஏக்கர், கால் ஏக்கர் நிலம் வைத்திருந்தவர்களிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டால், வீடு கட்டுவதற்கு நிலம் கொடுத்து, அரசாங்கமே வீடு கட்டிக் கொடுக்கிறது.

இதற்கு 85 சதவீத மக்கள் விருப்பம் தெரிவிக்கின்றார்கள், 15 சதவீதம் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். ஒரு திட்டம் என்று வரும்பொழுது ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தித் தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x