Published : 15 Dec 2018 12:41 PM
Last Updated : 15 Dec 2018 12:41 PM

தினமும் 2 டன் யானை சாணம்: கழிவை காகிதமாக மாற்றும் தமிழக அறநிலையத்துறை

'புன்யாளன் அகர்பத்திஸ்' என்ற மலையாளப் படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி கேரளாவில் சக்கை போடு போட்டது. ஜெயசூர்யா நடத்திருந்த அந்தத் திரைப்படத்தில் யானையின் சாணத்தில் இருந்து ஊதுபத்திகளும், சிறுநீரில் இருந்து மினரல் வாட்டரும் தயாரிக்கும் வகையில் கதை இருந்தது. படமும் வித்தியாசமாக இருந்ததால், வெற்றி பெற்றது.

தற்போது அதேபோன்ற நடைமுறையைத் தமிழக அறநிலையத்துறையும் செய்ய முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் இந்தப் புத்துணர்வு முகாமில் 30 யானைகள் வரை பங்கேற்றுள்ளன.

இந்த யானைகள் முகாமில் இருந்து நாள்தோறும் யானை சாணம் 2 டன் அளவுக்கு வெளியேற்றப்படும் நிலையில், 48 நாட்களுக்கு ஏறக்குறைய 96 முதல் 100 டன் சாணம் அகற்றப்படும். வீணாகும் அந்த சாணத்தின் மூலம் காகிதம் தயாரிக்கும் திட்டத்தை தமிழக இந்து அறநிலையத்துறை தொடங்கி இருக்கிறது.

யானையின் சாணத்தில் அதிகமான நார்சத்து இருப்பதால், அதை சுத்திகரித்து அதன் மூலம் காகிதம் தயாரிக்க எளிதாகப் பயன்படுத்து முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இந்து அறநிலையத்துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் டி.கே. ராமச்சந்திரன் கூறுகையில், “ யானையின் சாணத்தில் அதிகமான நார்சத்து இருக்கிறது. காகிதம் தயாரிக்கும் மூலப்பொருட்களுக்கு இந்த சாணம் ஏற்றது என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. யானையின் சாணத்தை இந்த முகாமில் இருந்து சேகரித்துச் சென்று, அதில் இருக்கும் நார்ச்சத்துக்களை மட்டும் தனியாக சுத்திகரித்துப் பிரித்து காகிதம் தயாரிக்க பயன்படுத்த உள்ளோம்.

அதற்கான தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. இதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டு அது வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆதலால், இந்தமுறை அதைச் செயல்படுத்த உள்ளோம். கடந்த முறை யானைகள் முகாமின்போது யானைகளின் சாணம் விவசாயிகளின் நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த முறை காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது ” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x