Published : 15 Dec 2018 09:33 AM
Last Updated : 15 Dec 2018 09:33 AM

லாரிகளில் குடிநீர் விநியோகிப்பதை முறைப்படுத்த ரூ.23 கோடியில் நவீன கருவிகளை வாங்கும் குடிநீர் வாரியம்

சென்னையில் லாரிகளில் குடிநீர் விநியோகிப்பதை முறைப்படுத்த ரூ.23 கோடியே 38 லட்சத்தில் நவீன கருவிகளை வாங்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளும் வறண்டன. அதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குழாய்கள் வழியாக குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டு, லாரிகளில் விநி யோகிப்பது அதிகரித்துள்ளது. அவ்வாறு தினமும் 6 ஆயிரம் நடைகளும், அதன் மூலம் 50 மில்லியன் லிட்டர் குடிநீரும் விநியோகிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல், டிசம்பர் 9-ம் தேதி வரை சென்னை யில் சராசரியாக 708 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 343 மிமீ மழைதான் பெய்துள்ளது. இது இயல்பை விட 52 சதவீதம் குறைவு. அதனால் அடுத்த ஆண்டு கோடையிலும், லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகிப்பது அதிகரிக்கக் கூடும்.

எனவே, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளதால், இதில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, விநியோகத்தை முறைப்படுத்த குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்காக ரூ.23 கோடியில் நவீன கருவிகளை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறிய தாவது:

இவ்வாரியத்திடம் 41 நீர் நிரப்பும் நிலையங்கள் உள்ளன. குடிநீர் குழாய் இல்லாத பகுதிகள், குறைவாக விநியோகம் செய்யும் காலங்களில் குடிநீர் சென்று சேராத பகுதிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒப்பந்த லாரிகளில் குடிநீர் விநி யோகிக்கப்படுகிறது.

அந்த லாரிகளில் உள்ள டேங்கர்கள் எத்தனை லிட்டர் கொள்ளளவு கொண்டது வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அளவிடுவதில்லை. உரிமையாளர் கள் தெரிவிப்பதை ஏற்றுக்கொண்டு லாரிகளுக்கு தகுதிச் சான்று வழங்கப்படுகிறது.

கோடைக்கால நீர்த் தேவையை சமாளிக்க பல்வேறு மாற்று குடிநீர் ஆதாரங்களைத் தேடிப் பிடித்து, குடிநீர் எடுத்து வரும் நிலையில், அதை சிக்கனமாக செலவிட வேண்டும். அதனால் லாரிகளில் விடப்படும் குடிநீரை சரியாக அளவிட மின் காந்த அதிர்வெண் கொண்ட இயந்திர பன்முக நீரளவு மானி, அதற்கான கட்டுப்பாட்டுக் கருவி ஆகியவற்றை நீர் நிரப்பும் நிலையங்களில் பொருத்த இருக்கிறோம்.

மேலும் ஒப்பந்த லாரிகளுக்கு ஸ்மார்ட் கார்டும் கொடுக்கப்படும். அதில் லாரியின் பதிவெண், அதன் கொள்ளளவு உள்ளிட்டவை பதியப்பட்டிருக்கும்.

ஸ்மார்ட் கார்டை கட்டுப்பாட்டு கருவியில் உள்ளீடு செய்தால், தானியங்கி முறையில், 6 ஆயிரம் லிட்டர் தேவை என்றால், அந்த லாரியில் 6 ஆயிரம் லிட்டர் நீர் மட்டுமே நிரம்பும். நீர் நிரப்ப பணியாளர்களும் தேவையில்லை. இப்போது பணியில் இருப்பவர் களை, தேவையான இடங்களில் பணியமர்த்தலாம்.

சம்பந்தப்பட்ட லாரி எத்தனை நடை இயக்கப்பட்டது என்பதும் பதிவாகிவிடும். இதன் மூலம் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்தப்படுவதுடன் முறை கேடுகளும் தடுக்கப்படும். இத்திட் டத்துக்காக ரூ.23 கோடியே 38 லட்சம் செலவிடப்பட உள்ளது.

கசிவு தடுக்கப்படும்

இனி சரியான அளவு குடிநீர் கொடுக்க இருப்பதால், லாரிகளில் கொண்டு செல்லும்போது கசிவு ஏற்படும்போது, சென்று சேரும் இடத்தில் குடிநீர் குறைய வாய்ப் புள்ளது. அதனால், அனைத்து லாரிகளிலும் வால்வுகளை சரி செய்யவும் அறிவுறுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x