Published : 15 Dec 2018 08:33 AM
Last Updated : 15 Dec 2018 08:33 AM

தமிழகத்தின் உரிமைகளை பறிக்கக்கூடிய அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெறவேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்தின் அணைகள் பாது காப்பு மற்றும் பராமரிப்பு உரிமை களை பறிக்கும் அம்சங்கள் இருப்ப தால், மக்களவையில் தாக்கல் செய் யப்பட்டுள்ள அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்பப் பெற மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா தாக்கல் கடந்த 12-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக தமிழக அரசின் கருத்துகளையும் கேட்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனி சாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துகளை கேட்காமல், அணை கள் பாதுகாப்பு சட்டத்தை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்று கடந்த ஜூன் 15-ம் தேதி நான் தங்களுக்கு எழுதிய கடிதத் தில் கூறியிருந்தேன். தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர் பாக ஜூன் 26-ம் தேதி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழக மக்களின் நிலைப் பாட்டை கூறி, அணைகள் பாது காப்பு மசோதாவையும் இணைத்து, உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தின் கருத்துகளுக்கு மத்திய அரசு எப்போதும் செவி மடுப்பதில்லை. அதேபோல, தற்போது அணைகள் பாதுகாப்பு சட்ட விவகாரத்திலும் மாநில அரசுகளின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்காமல், மக்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பிரிவில், ‘ஒரு மாநிலத்தில் இருக்கும் அணை, மற்றொரு மாநிலத்தின் பராமரிப் பின் கீழ் அந்த மாநிலத்துக்கு சொந்தமாக இருக்கும்போது, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அந்த அணைக்கான மாநில அணை பாதுகாப்பு நிறுவன மாக செயல்படும்’ என்று கூறப் பட்டுள்ளது. இதன்மூலம், வெளி மாநிலத்தில் உள்ள அணையின் பாதுகாப்பு, பராமரிப்பை மேற் கொள்ளும் உரிமை சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கு கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், துணாக்கடவு, பெருவாரிபள்ளம் என அண்டை மாநிலத்தில் உள்ள அணைகளை, மாநிலங்கள் இடை யிலான ஒப்பந்தங்கள் மூலம் சொந்தமாக பாதுகாத்து, இயக்கி, பராமரித்து வருகிறது.

மேலும், முல்லை பெரியாறு அணையில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த 2014 மே 7-ம் தேதி நிலைநாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த 4 அணைகளின் பாது காப்பு, பராமரிப்பை தமிழகத்திடம் இருந்து பெறும் அதிகாரத்தின் மூலம், தமிழக உரிமைகளை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் பறிக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் முரணானது. இது கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாகவும் அமையும்.

எனவே, அண்டை மாநிலங்களில் உள்ள அணைகளை சொந்தமாக தன் கட்டுப்பாட்டில், இயக்கி, பரா மரிக்கும் மாநிலங்களின் அணைகள் பாதுகாப்பு நிறுவனம் தொடர்பான சட்டப் பிரிவில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இரண்டாவதாக, அணைகளை பராமரிக்கும் மாநிலங் கள் அந்த பராமரிப்பை உறுதி செய்ய, வனம் மற்றும் வன உயிரின சரணாலயங்களில் அந்த மாநிலங் களின் தொழில்நுட்பவியலாளர்கள் நுழைவதற்கான புதிய துணை பிரிவுகளை சேர்க்க வேண்டும் என்று தமிழகம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக, ‘அணை பராமரிப்பு அதிகாரிகள், அலுவலர்கள், வனப்பகுதி, சரணாலய பகுதிகளில் சென்று அணை பாதுகாப்பு, பரா மரிப்பு, மறுவாழ்வு பணிகளை மேற்கொள்வதை தடுக்கும் வகையில் எந்த சட்டமும் இருக்கக் கூடாது’ என்பதை சேர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அம்சமும் அதில் இடம் பெறவில்லை. எனவே, தாங்கள் இதில் தலையிட்டு, மக்களவையில் கடந்த 12-ம் தேதி அறிமுகப் படுத்தப்பட்ட அணைகள் பாது காப்பு சட்ட மசோதாவை திரும்பப் பெறும்படி மத்திய நீர்வள அமைச் சகத்துக்கு உத்தரவிட வேண்டும். தமிழகம் மற்றும் இதர மாநிலங்களின் நியாயமான கருத்து களை கவனத்தில் கொள்ளாமல், எதிர்காலத்தில் அணை பாது காப்பு தொடர்பான எந்த ஒரு மசோதாவையும் தாக்கல் செய்யக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x