Published : 14 Dec 2018 08:18 AM
Last Updated : 14 Dec 2018 08:18 AM

ஊர்க்காவல் படையினர் முற்றுகையா?- மெரினா சாலைகளில் கூடுதல் போலீஸார் குவிப்பு

ஊர்க்காவல் படையினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் தலைமை செயலகம் மற்றும் மெரினா கடற்கரை சாலையில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தமிழக காவல் துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் பணிபுரிந்து வருகின்றனர். பேரிடர், கலவரம், தேர்தல் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் போலீஸாருடன் இணைந்து இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாதச் சம்பளம் கிடையாது. ஒருநாள் பணிபுரிந்தால் ரூ.500 வீதம் வழங்கப்படும். 31 நாட்களும் பணிபுரிந்தால் ரூ.16 ஆயிரம் வழங்கப்படும்.

கடந்த 8-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஊர்க்காவல் படையினர் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊர்க்காவல் படையினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து மெரினா கடற்கரை காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், தலைமைச் செயலகம், போர் நினைவுச் சின்னம், அண்ணா சதுக்கம் உட்பட பல இடங்களில் நேற்று காலை கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டனர்.

ஊர்க்காவல் படையினர் யாராவது வருகிறார்களா என்பதையும் தீவிரமாக கண்காணித்தனர். போர் நினைவுச் சின்னம் வழியாக வந்த ஊர்க்காவல் படையினர் சிலரை போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். நேற்று முழுவதும் இந்த பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப் பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x