Published : 14 Dec 2018 07:38 AM
Last Updated : 14 Dec 2018 07:38 AM

தமிழக பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவை இல்லை; ‘மாணவர் அரசியல்’ என்பது அசுத்தமான வார்த்தையல்ல: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து 

தமிழக பல்கலைக்கழகங்கள் ஒன்றில் கூட மாணவர் பேரவை இல்லை. 'மாணவர் அரசியல்' என்பது அசுத்தமான வார்த்தை அல்ல என்று உயர் நீதிமன்ற முன் னாள் நீதிபதி சந்துரு தெரிவித்தார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் கடந்த அக்டோபர் இறுதியில் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் துணைச் செயலர் பொறுப்பு தவிர 10 இடங்களை இந்திய மாணவர் சங்கம் வென்றது.

இதில் தலைவராக ஜூனைத் நஸார், செயலராக சிவராம கிருஷ்ணன், துணைத் தலைவர் களாக சோனியா, சுகதேவ் மற்றும் 6 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 11 பேருக்கான பதவி யேற்பு நிகழ்வு நேற்று புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் நடை பெற்றது. துணைவேந்தர் குர்மீத் சிங் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பேசியதாவது: 'மாணவர் அரசியல்' என்பது அசுத்தமான வார்த்தையல்ல. நான் சிறுவயதில் இருந்தே மாணவர் பேரவையில் பங்கு பெற்றுள்ளேன். டாக்டராகும் எனது கனவில் இருந்து சட்டத் துறையை தேர்வு செய்ய முக்கியக் காரணம் சிதம்பரம் உதயகுமார் வழக்குதான்.

மாணவர்களுக்கு முதலில் கேள்வி கேட்கும் திறன் தேவை. அதுவே சமூக அவலங்களை மாற்றும். கேள்வி கேட்பது நம் அடிப்படை உரிமை. கேள்விகளே அனைத்துக்குமான திறவுகோல். வகுப்பறை தொடங்கி எவ்விடத் திலும் கேள்வி கேட்பது மரியாதை குறைவானதல்ல என்பதை மாணவ ரும், ஆசிரியரும் உணர்தல் அவசி யம்.

தமிழகத்துக்கு வழிகாட்டி

மாணவர் பேரவை, தேர்தல் மூலம் தேர்வாகியுள்ள சூழல் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ளது. தமிழகத்தில் 17 பல் கலைக்கழகங்கள், 29 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் ஒன்றில் கூட மாணவர் பேரவை இல்லாத சூழலே நிலவுகிறது. தமிழக பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டியாக புதுச்சேரியே உள்ளது.

இந்தியாவில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ) தொடர்பான செய்திகள் செய்தித்தாள்களில் தொடர்ந்து இடம் பிடிக்கின்றன. ஏனெனில் ஜேஎன்யூவுக்கும் சமூகத்துக்கும் இடையே தொடர்பு உள்ளது. மக்களும் அங்கு நடப்பதை அறிந்து கொள்கின்றனர். அதை அனைத்து மாணவர்களும் உணர் வது அவசியம். நாட்டில் வருங்கால ஜனநாயகத்தை உறுதிச் செய்ய மாணவர் பேரவை அவசியம்.

படிப்புக்கே முதலிடம்

மாணவர்கள் படிப்பது, கற்பிப்பது, அதையடுத்தே போராட வேண்டும். அம்பேத்கரின் வரிகளை மனதில் கொள்ள வேண்டும். படிப்பதற்கு பதிலாக போராட்டத்தை முதலில் கொள்வது கூடாது. படிப்பை முதலாவதாக வைத்திருத்தல் அவசியம் என்று குறிப்பிட்டார்.

மாணவர் பேரவை தலைவராக பதவியேற்பதற்கு முன்பு பேசிய ஜூனைத் நஸார், "கல்வியானது வர்த்தகமல்ல. நமது உரிமை. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளிலும் உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இலக்கிய, கலைத் திருவிழாக்களை நடத்த உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஆயுஷ் பிரிவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி டாக்டர் பிரகாஷ் ராவ், பல்கலைக்கழக பதிவாளர் சசிகாந்ததாஸ் உட்பட பலர் மாணவர் பேரவை நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x