Published : 11 Dec 2018 10:16 PM
Last Updated : 11 Dec 2018 10:16 PM

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மோடி கூறியது ஆணவத்தின் உச்சகட்டம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்டாலின்

5 மாநில தேர்தல்கள் பாஜக தோல்வி மோடிக்கு கிடைத்த பலத்த அடி, காங்கிரஸ் இல்லாத இந்தியா என மோடி சொன்னது ஆணவத்தின் உச்சக்கட்டம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி:

5 மாநில தேர்தல் முடிவுகளில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வென்றுள்ளதை எல்லாத் தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்கள். நீங்கள் சோனியா காந்தி அவர்களையும் ராகுல்காந்தி அவர்களையும் சந்தித்து வந்துள்ளீர்கள். அதற்குப் பிறகு இந்த முடிவுகள் வந்திருக்கிறது. பிஜேபி எல்லா இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?  

நாடாளுமன்றத் தேர்தல்  வருவதற்கு முன்பு ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து இருக்கிறது. அதனுடைய முடிவுகள் இன்று வந்திருக்கிறது. இன்னும் முழுமை அடையவில்லை, இந்த தேர்தலைப் பொறுத்தவரையிலே இது ஒரு மினி பார்லிமென்ட் தேர்தல் என்பதுதான் என்னுடைய கருத்து. எனவே, இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று இருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுகளை திமுகவின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பாசிச ஆட்சிக்கு எதிராக நேற்றைய தினம் புதுடில்லியில் காங்கிரஸ் கட்சியினுடைய தலைமையில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து கட்சியினுடைய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.  நேற்றைய தினம் அந்தக் கூட்டம் நடைபெற்று இன்றைக்கு வெற்றிச் செய்தியாக இந்தச் செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. 

இந்தச் செய்தி நிச்சயமாக வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முழுமையான வெற்றியாக வரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பி.ஜே.பி.யினுடைய கோட்டையாக விளங்கிய மாநிலங்களிலேயே காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இந்த வெற்றி என்பது பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய ‘அடி’ என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி இந்தியாவை உருவாக்கப் போகிறேன் என்று சொன்னார். ஆனால் எதுவும் உருவாக்கப்படவில்லை, அதுமட்டுமல்ல காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கப் போகிறேன் என்று சொன்னார். இதுதான் மோடியினுடைய ஆணவத்தினுடைய உச்சகட்டம்.

அவர் அப்படி சொன்ன காரணத்தால் இப்பொழுது நாங்கள் பி.ஜே.பி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்ல மாட்டோம். முறையாக வர இருக்கக்கூடிய தேர்தலில் மதவாதம் பிடித்திருக்கக் கூடிய ஆட்சியை ஒழிப்பதற்கு வேற்றுமை இல்லாத, மோதல் இல்லாத, மதவாதம் இல்லாத ஒரு ஆட்சியை உருவாக்குவதற்கு முயல்வோம்.

நேற்றைய தினம் அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட அந்த முடிவின் அடிப்படையிலே ஒரு சிறப்பான கூட்டணியை உறுதியோடு அமைத்து அதன் மூலமாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய  இந்த பாசிச மோடி ஆட்சியை நிச்சயமாக அப்புறப்படுத்துவோம். அதை வர இருக்கக்கூடிய தேர்தலில் அனைவரும் அதை காணப் போகிறார்கள்.

சந்திரசேகர ராவ் அவர்களுக்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்தப் பிறகு தி.மு.க போன்ற மிகப்பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய அவசியமில்லை, தனித்துப் போட்டியிடலாம் என்று சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இது அவருடைய கருத்து. இது, அவர் தி.மு.க மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையை காட்டுகிறது.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x