Published : 11 Dec 2018 09:24 PM
Last Updated : 11 Dec 2018 09:24 PM
இத்தனைக்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் யார் பலசாலி என்று கேள்வி எழுப்பிய ரஜினி தனது கருத்தை மாற்றி பாஜக செல்வாக்கை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
5 மாநிலங்களில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தது. மூன்றுமே பாஜகவுக்கு வலுவான செல்வாக்குள்ள மாநிலங்கள். அது தவிர தெலங்கானா, மிசோராமிலும் தேர்தல் நடைப்பெற்றது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவின் தோல்வி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொருளாதார கொள்கை, விவசாயிகளுக்கு எதிரான நிலை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் காரணமாக தோல்வி கிடைத்ததாக விமர்சனம் எழுந்தது.
இந்த தோல்வி குறித்து மத்திய அரசுக்கு நெருக்கமான, மோடியின் நண்பரான ரஜினியின் கருத்து வராத நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து?
இது கிளியரா பாஜக தனது செல்வாக்கை இழந்துவிட்டது என்பதை காட்டுகிறது.
மோடி ஒரு வலிமையான தலைவர் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தீர்கள்?
கண்டிப்பாக இது பின்னடைவு என்று சொன்னேனே, கண்டிப்பாக இது பாஜகவுக்கு ஒரு பின்னடைவுதான் அதில் சந்தேகமே இல்லை.
இவ்வாறு ரஜினி தெரிவித்தார். சில வாரங்களுக்கு முன் பாஜக அனைவராலும் எதிர்க்கப்படுகிறது அப்படியானால் பாஜக ஆபத்தான கட்சியா என்கிற கேள்விக்கு, “அப்படி தான் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அப்படியானால் கட்டாயம் அப்படித்தானே இருக்கமுடியும்?” என்று தெரிவித்த ரஜினி மறுநாள் தாம் கூறிய அர்த்தத்தை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.
மோடி பலமானவரா ? என்கிற கேள்விக்கு ஒருவரை 10 பேர் சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால் இதில் யார் பலசாலி ஒருவரா ? 10 பேர் சேர்ந்து ஒருவருக்கு எதிராக யுத்தத்திற்கு போனால், பலசாலி 10 பேரா ? அந்த ஒருத்தரா ? இதனை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். என்று கூறிவிட்டுச் சென்றார்.
இந்நிலையில் பாஜக தோல்வியை தழுவிய நிலையில் பாஜக செல்வாக்கை இழந்துவருகிறது என மீண்டும் நேர் எதிர் நிலைப்பாட்டில் பதிலளித்துள்ளார் ரஜினி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT