Published : 11 Dec 2018 06:27 PM
Last Updated : 11 Dec 2018 06:27 PM

அம்மா உணவக பெண் ஊழியரிடம் கவனத்தை திசைதிருப்பி வழிப்பறி: ஊழியர்களின் சம்பளப் பணம் ரூ.85 ஆயிரம் பறிபோனது

சூளைமேட்டில் அம்மா உணவக ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி ஊழியர்களின் ஒருமாத சம்பளப் பணத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனர்.

சூளைமேடு அருணாச்சலம் தெருவில் வசிப்பவர் கீதா (35). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சூளைமேடு நமச்சிவாயபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இதில் பத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மாதாமாதம் சம்பளப் பணம் சூளைமேடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போடப்படும்.

மொத்தமாக கீதாவின் அக்கவுண்ட்டில் போடப்படும் பணத்தை எடுத்து மற்ற ஊழியர்களுக்கு சம்பளமாகப் பிரித்துக் கொடுக்கப்படும். வழக்கம்போல் கடந்த மாதத்துக்கான சம்பளப் பணம் வங்கியில் போடப்பட்டது. அதை கீதா எடுக்கச் சென்றார். பணம் ரூ. 85,800- ஐ எடுத்து கைப்பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்த கீதா, அதை தனது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்தார்.

பின்னர் அம்மா உணவகத்துக்குப் புறப்பட்டார். அப்போது அவரது முதுகில் எதுவோ விழுந்ததுபோல் இருந்தது. இதனால் அவரது முதுகுப் பகுதியில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அரிப்பு தாங்கமுடியாததால் என்ன செய்வது என்று தெரியாமல் நேராக தனது வீட்டுக்கு வந்தவர் வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று குளித்து உடை மாற்றியுள்ளார்.

அதன்பின்னர் அவரது முதுகில் ஏற்பட்ட அரிப்பு நின்றுள்ளது. பின்னர் அம்மா உணவகத்துக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்துள்ளார். அப்போது அவருக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. இருசக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர் அக்கம்பக்கமிருந்தவர்களை இங்கு யாராவது என் வண்டியில் உள்ள சீட்டை திறப்பதைப் பார்த்தீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அருகிலிருந்தவர்கள் மூன்று நபர்கள் உங்கள் வாகனம் அருகே நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம் என்று கூறியுள்ளனர்.

உடனடியாக இது குறித்து கீதா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கீதா பணம் எடுத்த இடத்தில் அவரைப் பின் தொடர்ந்த மர்ம நபர்கள் அவர் உடலில் அரிப்பு ஏற்படுத்தும் ரசாயனப் பவுடரைத் தூவி விட்டுள்ளனர்.

அரிப்பு தாங்காமல் பெண் என்பதால் உடைகளைக் களைவதிலும் உள்ள சிக்கல் காரணமாக கீதா அவரது வீட்டுக்குச் செல்ல, அந்த நேரம் அவரைப் பின் தொடர்ந்து வந்தவர்கள் இருசக்கர வாகனத்தின் சீட்டைத் திறந்து சம்பளப் பணத்தை எடுத்துச் சென்றிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

அதேபோன்று பணத்தைக் கையாளும் நபர்கள் சில நேரம் பணத்தேவைக்காக எடுத்து வைத்துக்கொண்டு திருடப்பட்டதாக நாடகமாடுவார்கள். அப்படியும் நடக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீதாவின் வீட்டருகில் பணம் திருடப்பட்டதாகக் கூறும் இடத்தில் சிசிடிவி கேமரா இல்லை. ஆனால் வங்கிக்குள், வங்கிக்கு வெளியே கீதாவை யாராவது பின் தொடர்ந்தார்களா? என அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சேகரித்துள்ளனர்.

அம்மா உணவகம் மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படுகிறது. அனைத்து விவகாரங்களும் ஆன்லைனில் இன்று நடக்கும்போது 10க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சம்பளப் பணத்தை அவரவரது வங்கிக்கணக்கில் தனியாகப் போடாமல் இதுபோன்று ஒருவர் கணக்கில் வரவு வைத்து, அதை அவர் பாதுகாப்பற்ற முறையில் எடுத்துவரும் முறையை இன்னும் சென்னை மாநகராட்சி ஏன் மாற்றாமல் உள்ளது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x