Published : 11 Dec 2018 06:03 PM
Last Updated : 11 Dec 2018 06:03 PM

இனி தயக்கம் வேண்டாம்; கூட்டணிக்குத் தலைமை ஏற்க ராகுல் காந்தி தகுதியானவர்தான்: திருமாவளவன்

எந்தத் தயக்கமும் இன்றி காங்கிரஸ் தலைமையில் இனி அணி திரளலாம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், பாஜக ஆட்சியிலிருந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை இழந்துள்ளது. மற்ற 2 சிறிய மாநிலங்களிலும் பாஜக அல்லாத கட்சிகளே ஆட்சியைப் பிடித்துள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் அதிகப்படியான நாடாளுமன்றத் தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. சத்தீஸ்கரில் உள்ள 11 இடக்களில் 10 தொகுதிகளையும், மத்தியப் பிரதேசத்தில் 29 இடங்களில் 27 தொகுதிகளையும் ராஜஸ்தானில் 25 இடங்களில் அனைத்தையும் ஆக மொத்தத்தில் 65 இடங்களில் 62 இடங்களை பாஜக வென்றிருந்தது.

தற்போது இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக அடைந்துள்ள தோல்வி 2019 பொதுத்தேர்தலில் 30 இடங்களைக்கூட அதனால் பெறமுடியாது என்பதையே காட்டுகிறது.

பாஜக ஆட்சியிலிருந்த மூன்று மாநிலங்களையும் தக்க வைப்பதில் தான் நரேந்திர மோடியின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்று ஊடகங்கள் கருத்து தெரிவித்து வந்தன. அதனடிப்படையில் பார்த்தால் 2019 பொதுத்தேர்தலில் மோடியின் வீழ்ச்சி உறுதி என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு தனது பிரச்சாரத்தின் மூலம் மாபெரும் வெற்றியை ராகுல் காந்தி ஈட்டித் தந்துள்ளார். அடுத்து வரும் பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியைத் தலைமை ஏற்று வழிநடத்த அவர் தகுதியானவர்தான் என்பதை இதன்மூலம் நிரூபணம் செய்துள்ளார்.

எனவே, இந்தியாவெங்கும் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள் எவ்விதத் தயக்கமுமின்றி காங்கிரஸ் தலைமையில் அணிதிரண்டு நரேந்திர மோடியின் மக்கள் விரோத கொடுங்கோல் ஆட்சியை அகற்றிட முன்வர வேண்டும்" என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x