Published : 11 Dec 2018 03:56 PM
Last Updated : 11 Dec 2018 03:56 PM

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார். இதனால் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ஜெயராஜ். கீழ்ப்பாக்கத்திலுள்ள தேவாலயத்தில் பாஸ்டராக உள்ளார். இவரது மனைவி பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். இவர்களது மகள் மஹிமா (18). தாம்பரத்தில் உள்ள பிரபல கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் முதலாமாண்டு படித்து வந்தார்.

மஹிமா நேற்று மாலை 5.30 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சக மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனையிட்டபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அவர் விளையாடும்போதே மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் மஹிமாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரையும் விளையாட்டில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்துவதாகவும், சுகவீனமாக இருந்த மஹிமா கட்டாயமாக விளையாடியதே அவர் உயிரிழப்புக்குக் காரணம் என்றும் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டனர்.

பின்னர் போலீஸார் தலையிட்டு அவர்களை கலைந்துபோகச் செய்தனர். கல்லூரி மாணவி ஒருவர் விளையாட்டின்போது உயிரை விட்டது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x