Published : 11 Dec 2018 03:05 PM
Last Updated : 11 Dec 2018 03:05 PM

கீழ்ப்பாக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியிடம் செல்போன் பறிப்பு: 3 நாட்களுக்குப் பின் இளைஞர் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியிடம் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பிய இளைஞர் கண்காணிப்பு கேமராவில் சிக்கியதில் 4 நாட்களில் கைது செய்யப்பட்டார்.

தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறையில் தலைவராக இருப்பவர் குமரகுருபரன். ஐஏஎஸ் அதிகாரியான இவர் கீழ்ப்பாக்கம் கார்டன், உள்வட்ட சாலையில் வசிக்கிறார். இவரது மனைவி அனுராதா (33). இவர் கடந்த 8-ம் தேதி காலை 9.30 மணி அளவில் வெளியே சென்றுவிட்டு காரில் வந்து இறங்கியுள்ளார்.

அப்போது செல்போன் அழைப்பு வந்ததால் வீட்டு வாசலில் நின்றபடி செல்போனில் பேசியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென அவரது கையிலிருந்த விலை உயர்ந்த செல்போனைப் பறித்துச் சென்றார். அனுராதா திருடன் திருடன் என கூச்சலிட்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பறந்துவிட்டார்.

இதுகுறித்து அனுராதா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது மோட்டார் சைக்கிளில் ஒரு இளைஞர் வேகமாகச் செல்வது பதிவாகியிருந்தது.

இதையடுத்து கடந்த 3 நாட்களாக அந்த வாகனத்தின் எண்ணை எடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் கீழ்ப்பாக்கம், டி.பி. சத்திரத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் மகன் மணிகண்டன் (19) என்பவருக்குச் சொந்தம் என தெரிய வந்ததன் பேரில்  அங்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மணிகண்டன்தான் செல்போனைப் பறித்துச் சென்றவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரனின் மனைவியின் ஒன் பிளஸ்-6 செல்போனையும், மேலும் விவோ, ஜியோனி, எல்ஜி மொபைல் போன்கள் என 4 செல்போன்கள், வழிப்பறிக்கு பயன்படுத்திய ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் சமீபகாலமாக செல்போன் பறிப்புகள் அதிக அளவில் நடந்து வருகிறது. சில நாட்களுக்குமுன் கோட்டூர்புரத்தில் பெண் நீதிபதி எதிரிலேயே அவரது மகளின் செல்போனை ஒருவர் பறித்துச் சென்றார். சில மாதங்களுக்கு முன் அப்போது சென்னையின் கூடுதல் காவல் ஆணையராக இருந்த உயர் அதிகாரி வாக்கிங் செல்லும்போது அவரது பாதுகாவலர்கள் எதிரிலேயே செல்போனைப் பறித்துச் சென்றனர்.

சில நாட்களுக்கு முன் அமைச்சர்கள் குடியிருக்கும் பசுமை வழிச்சாலையில் இரண்டு நபர்களிடம் மோட்டார் சைக்கிளில் செல்லும்போதே மேல் பாக்கெட்டில் உள்ள செல்போனைப் பறித்துச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது.

கடந்த வாரம் அடையாறு தொடங்கி பட்டினப்பாக்கம், ராயப்பேட்டை, சாந்தோம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டவர்களிடம் செல்போனைப் பறித்துச் சென்றனர். போலீஸார் தொடர்ச்சியாக வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x