Published : 10 Dec 2018 09:43 PM
Last Updated : 10 Dec 2018 09:43 PM

சர்கார் விவகாரம்: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

'சர்கார்' விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர் தேவராஜன் அளித்த புகாரின் பேரில்  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார்  3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'சர்கார்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில்  தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக தேவராஜன் என்ற சமூக ஆர்வலர் வழக்கு தொடர்ந்தார். அதிமுகவினரும் 'சர்கார்' படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். படத்தின் பேனர்கள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டன.

'சர்கார்' படத்துக்கு எதிர்ப்புகள் வலுத்ததால் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டும், சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டும் புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டும் சர்கார் படம் திரையிடப்பட்டது.

மேலும், தேவராஜன் தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மனுத்தாக்கல் செய்தார். ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக்கூடாது என்ற நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவை டிசம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி  ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்படட்து.

'சர்கார்' படத்தில் அரசின் இலவசத் திட்டங்களை விமர்சித்தது, இலவசப் பொருட்களை எரித்தது போன்ற காட்சிகளை அமைத்தது தன் கருத்துச் சுதந்திரம் என்றும், மன்னிப்பு கோர முடியாது என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இனிவரும் படங்களில் இதுபோன்ற காட்சிகளை அமைக்கப் போவதில்லை என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டது.

காவல்துறையில் அளித்த புகாரை சட்டத்திற்குட்பட்டு 2 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன் வழக்கை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் தேவராஜன் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்பு அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இயக்குநர் முருகதாஸ் மீது 153, 153(A),505(A)(B)(C) என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டிசம்பர் 13-ம் தேதி வரை முருகதாஸை கைது செய்யக்கூடாது என்று  நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய  மத்திய குற்றப் பிரிவு போலீஸார் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். புகார் கொடுத்த தேவராஜனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர்.  தற்போது முருகதாஸிடம் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விரைவில் விசாரணை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x