Published : 10 Dec 2018 01:07 PM
Last Updated : 10 Dec 2018 01:07 PM

மத்திய அரசு பச்சைக்கொடி: 7 தமிழர்கள் விடுதலையை ஆளுநர் அறிவிக்க வேண்டும்; ராமதாஸ்

7 தமிழர்கள் விடுதலைக்கு எதிரான வழக்கை காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதால், அவர்களை தமிழக ஆளுநர் விடுவிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிலர் தொடர்ந்துள்ள வழக்கை காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிரான முட்டுக்கட்டையை அகற்ற மத்திய அரசின் இந்நிலைப்பாடு பெரிதும் உதவும். அந்த வகையில் மத்திய அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432, 435 ஆகிய பிரிவுகளின் கீழ் விடுதலை செய்ய 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக அரசு முடிவு செய்தது. அதை எதிர்த்து ராஜீவ்காந்தி கொலையின் போது உயிரிழந்த வேறு சிலரின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட சிலருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72 மற்றும் 161 ஆவது பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட மத்திய அரசு, 7 தமிழர்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின் கீழ் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கு தேவையற்றது; அவர்களின் கோரிக்கை காலாவதியாகிவிட்டதாகக் கருதி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

7 தமிழர் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்த அப்பாஸ் என்பவர் உள்ளிட்ட சிலர் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் வரை பேரறிவாளன் உள்ளிட்டோரை  விடுதலை செய்யக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதை தமிழக ஆளுநர் தாமதப்படுத்தி வந்த நிலையில் தான் மத்திய அரசு இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை ஏற்று 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் எந்த நேரமும் தள்ளுபடி செய்யலாம்.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அப்பாஸ் உள்ளிட்ட சிலரின் வழக்குகளைக் காரணம் காட்டி 7 தமிழர்கள் விடுதலையை தாமதப்படுத்தி வந்த ஆளுநர், மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்? என்பது தான் இப்போது விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.

7 தமிழர்களையும் விடுதலை செய்யப் பரிந்துரைத்து கடந்த 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாளில் இருந்தே, பேரறிவாளன் உள்ளிட்ட  எழுவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு எந்தத் தடையும் இல்லை என்றும், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், யாருடைய விருப்பத்தையோ  நிறைவேற்றுவதற்காக அவர்களின் விடுதலையை தமிழக ஆளுநர் திட்டமிட்டு தாமதித்து வந்தார். 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இன்றுடன் 93 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இனியும் ஆளுநர் தாமதிப்பது முறையல்ல.

அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு இல்லை என்ற ஒற்றை விதியை மட்டும் வைத்துக் கொண்டு, 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்  வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்வதை தாமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது; இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். இந்தத் தவறை தமிழக ஆளுநர் மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது. 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்து முட்டுக்கட்டைகளும்  விலகி விட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுநர் பன்வாரிலால்  புரோஹித் பிறப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பாக தமிழக அரசு பரிந்துரைத்து வரும் 17 ஆம் தேதியுடன்  100 நாட்கள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குள்ளாக பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை தமிழக அரசும், தமிழக ஆளுநரும் உறுதி செய்ய வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x