Last Updated : 10 Dec, 2018 10:04 AM

 

Published : 10 Dec 2018 10:04 AM
Last Updated : 10 Dec 2018 10:04 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,300 மெகாவாட் காற்றாலைகள் புதிதாக அமைப்பு: 550 மெகாவாட் சூரிய மின் உற்பத்திக்கும் திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 550 மெகாவாட் அளவுக்கு சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலக்கரியை பயன்படுத்தி அனல்மின் நிலையங்கள் மூலம் செய்யப்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, காற்றாலை, சூரியசக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க அல்லது மரபுசாரா எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை மத்திய, மாநில அரசுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பொருத்தவரை காற்றாலை மற்றும் சூரியசக்தி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

தென்மாவட்டங்களில் அதிகம்

தமிழகத்தில் தற்போது சுமார் 8,000 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் 2,000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் காற்றாலை மின் உற்பத்தி திறனை இரு மடங்கு உயர்த்தவும், சூரிய மின்சக்தி திறனை 10 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உயர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

காற்றாலை மின் உற்பத்தியை பொறுத்தவரை தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் தான் அதிகப்படியான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் மட்டும் சுமார் 4,425 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களில் காற்றாலை மின் உற்பத்தி திறன் முழுமையாக பயன்படுத்தப்பட்டுவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது அதிகமாக காற்றாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

1,300 மெகாவாட்

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கெனவே 558 காற்றாலைகள் மூலம் 552.78 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு, கடம்பூர், எப்போதும்வென்றான், கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளில் புதிதாக காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இம்மாவட்டத்தில் 4 தனியார் நிறுவனங்கள் மூலம் 1,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் புதிதாக காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், “250 மெகாவாட் அளவுக்கு காற்றா லைகள் அமைக்கும் பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள காற்றாலைகள் அனைத்தும் இன்னும் ஓராண்டுக்குள் அமைக்கப்பட்டு விடும்” எனவும் அவர்கள் கூறினர்.

இந்த 1,300 மெகாவாட் மின் உற்பத்தியில் 600 மெகாவாட் மத்திய தொகுப்புக்கும், 700 மெகாவாட் மாநில தொகுப்புக்கும் வழங்கப்படவுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி திறன் அடுத்த ஓராண்டில் 1,850 மெகாவாட் அளவுக்கு உயரும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் எதிர்ப்பு

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தபோதும், தனியார் காற்றாலை நிறுவனங்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

அரசு புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகளை ஆக்கிரமித்தும், தனியார் நிலங்களில் உரிய அனுமதி இல்லாமலும் பாதை அமைத்தல், மின் கம்பங்களை நடுதல் போன்ற செயல்களில் காற்றாலை நிறுவனத்தினர் சிலர் தொடர்ந்து ஈடுபடுவதாக கூறி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனுக்களை அளித்தனர். இதையடுத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் காற்றாலை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.

சூரிய மின்சக்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆண்டில் அதிக நாட்கள் இங்கு வெயில் இருக்கும் என்பதால், சூரிய மின்சக்தி உற்பத்திக்கு உகந்த மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 41 மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் புதிதாக 550 மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களில் காற்றாலை மின் உற்பத்தி திறன் முழுமையாக பயன்படுத்தப்பட்டுவிட்டது.

முன்னோடி மாவட்டம்

காற்றாலை மின் உற்பத்திக்கு முன்னோடி தூத்துக்குடி மாவட்டம் தான். தமிழகத்தில் முதல் முதலாக காற்றாலைகள் அமைக்கப்பட்டது தூத்துக்குடியில் தான்.

கடந்த 1986-ம் ஆண்டு ஜனவரி மாதம் தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு பகுதியில் உப்பளங்களில் தலா 55 கிலோ வாட் திறன் கொண்ட 21 காற்றாலைகள் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டன. 1992-ம் ஆண்டு வரை இந்த காற்றாலைகள் செயல்பட்டன. அதன் பிறகு அவை அப்படியே கைவிடப்பட்டன. பின்னர் கயத்தாறு பகுதியில் மட்டும் ஆங்காங்கே தனியார் மூலம் காற்றாலைகள் அமைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x