Published : 10 Dec 2018 09:30 AM
Last Updated : 10 Dec 2018 09:30 AM

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் கீழே இன்ஜினுடன் கூடிய புதிய வகை மின்சார ரயில் தயாரிப்பு; ஒருசில நாட்களில் அறிமுகம்: வழக்கத்தைவிட 9% பேர் கூடுதலாக பயணிக்கலாம்

‘ரயில் 18’ போன்று ரயில் பெட்டிகளின் கீழ் இஞ்சின் பொருத்தப்பட்ட புதிய வகை மின்சார ரயில், ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய வகை ரயில் பெட்டியை ஐசிஎப் பொதுமேலாளர் எஸ்.மணி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

சென்னை பெரம்பூர் ஐசிஎப்பில் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை) ‘ரயில் 18’ என்ற இந்தியாவின் அதிவேக ரயில் சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. தற்போது, இந்த ரயில் ராஜஸ்தானில் அதிவேகமாக ஓட்டி, சோதனை செய்யப்பட்டு வருகிறது. தனியாக ரயில் இஞ்சின் இல்லாமல் மோட்டார் மற்றும் இதர ரயில் இயக்க சக்தி பாகங்களைப் பயணிகள் ரயில்பெட்டிகளின் கீழே பொருத்தி, பயணிகள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்ய வசதியாக செய்யப்பட்ட தொழில் நுட்பம் இந்த ரயிலின் மிக முக்கியமான அம்சமாகும்.

தற்போது இந்த தொழில்நுட்பத்தைப் புறநகர் ரயில்களிலும் அறிமுகப்படுத்த ஐசிஎப் திட்டமிட்டு, அதற்கு ஏற்றார்போன்ற ரயில்பெட்டி மாதிரி ஒன்றை தயாரித்துள்ளது. தற்போதுள்ள நெடுந்தொலைவு புறநகர் மின்சார பயணிகள் ரயிலில் (மெமு) மொத்தம் 2,402 பயணிகள் வரை பயணிக்கலாம். இந்த புதிய வகை ரயில்தொடரில் 2618 பயணிகள் அதாவது 9 சதவீதம் அதிக பயணிகள் பயணிக்கலாம். இந்தப் புதிய வகை புறநகர் மின்தொடர் ரூ.26 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை ரயில் பெட்டியை ஐசிஎப் பொதுமேலாளர் எஸ்.மணி உட்பட உயர் அதிகாரிகள் பலர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக ஐசிஎப் அதிகாரிகள் கூறியதாவது:

ஐசிஎப் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சமீபத்தில் தற்போதுள்ள புறநகர் பயணிகள் ரயிலை மேம்படுத்தவது குறித்து ஆய்வு மேற்கொண்டு, புதிய வடிவமைப்பை உருவாக்கினர். அதன்படி, தற்போது புதிய வகை மின்தொடர் ரயில் பெட்டி மாதிரி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், வழக்கமான ரயில்களைக் காட்டிலும் 9 சதவீதம் பேர் அதிகமாக பயணம் செய்யலாம்.

‘ரயில் 18’ ரயில்பெட்டிகளில் இருப்பது போலவே அதிநவீன ரயில்சக்கர சட்டங் கள் இந்த ரயில்பெட்டிகளில் பொருத்தப் பட்டுள்ளதால், மும்முனை மின்சக்தி மோட் டார்கள் அவற்றிலேயே பொருத்தப்பட் டுள்ளன. மின்சார உபயோகத்தை 35 சதவீதம் வரை குறைக்க புதிய தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது.

ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கொண்டு பெட்டிகள் தயாரிப்பு, குஷன் கொண்ட பயணிகள் இருக்கைகள், பயணிகள் பெட்டியில் இரு கழிவறைகளும், ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தரைகள், சிசிடிவி கேமராக்கள் உட்பட பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மின்ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்லும். 2 இயக்குநர் பெட்டிகளும், 6 பயணிகள் பெட்டிகளும் இருக்கும். இயக்குநர் பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 280 பேரும், பயணிகள் பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 343 பேரும் என ஒரு ரயலில் மொத்தம் 2618 பயணிகள் பயணிக்கலாம். இந்த புதிய பயணிகள் மின்தொடர் ரயில் வரும் 13 அல்லது 14-ம் தேதியில் அறிமுகம் செய்யப்படும். ரயில்வே வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலம் இயக்க சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x