Published : 09 Dec 2018 10:39 AM
Last Updated : 09 Dec 2018 10:39 AM

எச்.ராஜா, பாமகவினர் மீது அவதூறு வழக்கு: திருமாவளவன் திட்டவட்டம்

திட்டமிட்டு எம்மீது அவதூறு பரப்பும் பாமகவினர் மற்றும் எச். ராஜா ஆகியோர் மீது விசிக சார்பில் அவதூறு வழக்குத் தொடுக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புரட்சியாளர் அம்பேத்கர் படத்தின் முன்னர் நின்றுகொண்டு ஒரு இளைஞன், தலித் அல்லாத சமூகத்தினரைச் சீண்டும் வகையில் பெண்களைக் கொச்சைப்படுத்தும் முழக்கங்களை எழுப்புகிறான். அது மிகவும் இழிவான, முதிர்ச்சியற்ற ஒரு நடவடிக்கையாகும். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த இளைஞனின்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

அந்த இளைஞனின் நடவடிக்கையைக் கண்டிப்பதைவிடவும், அவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவன் என்று முத்திரைக் குத்துவதிலேயே பாட்டாளி மக்கள் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவன் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. அவனைப் பற்றிய எந்த தகவலையும் அறியாமல், திடீரென அந்த இளைஞன் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவனென்று திட்டமிட்டு அவதூறு பரப்புவது,  எம்மீது அபாண்டமாகப் பழி சுமத்தும் அப்பட்டமான அரசியல்  உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகும்.

பொதுமக்களிடையே எமக்கு எதிரான கருத்தையும் வெறுப்பையும் உருவாக்குகிற வகையில் பாமகவினர் மிகவும் மலிவான அரசியலைத் தொடர்ச்சியாகச் செய்துவருகின்றனர்.  இதன்மூலம் சாதிப்பகையை மூட்டி தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் நோக்கமாகும்.

அவர்களைப் போலவே பாஜகவைச் சார்ந்த எச். ராஜாவும் வழக்கம்போல எம்மீது தனது காழ்ப்புணர்ச்சியைக் கக்கியிருக்கிறார். எமது கட்சி இடம்பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு மறைமுகமாக நெருக்கடியை ஏற்படுத்துவதே இந்தச் சாதிய மதவாத சக்திகளின் உள்நோக்கமாகும். எனவேதான், அந்த இளைஞன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருவதைவிட விசிக மீது பழி சுமத்துவதில் குறியாக உள்ளனர். இவர்களின் உண்மை முகத்தைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இந்நிலையில், திட்டமிட்டு எம்மீது அவதூறு பரப்பும் பாமகவினர் மற்றும் எச். ராஜா ஆகியோர் மீது விசிக சார்பில் அவதூறு வழக்குத் தொடுக்கப்படும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x