Last Updated : 09 Dec, 2018 10:31 AM

 

Published : 09 Dec 2018 10:31 AM
Last Updated : 09 Dec 2018 10:31 AM

புதுச்சேரி - வில்லியனூரில் இடிந்து விழும் நிலையில் அரசுப் பள்ளிக் கட்டிடம்: விபரீதம் நடக்கும் முன் அரசு விழித்துக் கொள்ளுமா?

வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிதிலமடைந்த கட்டிடத்தால் ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் அச்சமடைந்துள்ளனர்.

புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சுமார் 800 மாணவிகள் படித்து வருகின்றனர். 55 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். புதுச்சேரி கிராம புறங்களிலேயே அதிக மாணவிகள் படிக்கின்ற அரசு பள்ளிகளில் இதுவும் ஒன்று.

இந்தப் பள்ளி கடந்த 1990 முதல் 96-ம் ஆண்டு வரையிலும் பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்றது. கடந்த ஆண்டிலும் இந்தப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது. முற்றிலும் கிராமப் பகுதி மாணவிகள் படிக்கின்ற இப்பள்ளியின் கட்டிடம் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, சிதிலமடைந்துள்ளது. குறிப்பாக இந்தப் பள்ளிக் கட்டிடத்தின் தரைத் தளம் மற்றும் முதல் தளம் ஆகியவை முற்றிலும் சேதமடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, உள் பகுதி தளம் அடிக்கடி இடிந்து விழுந்து வருகிறது.

மேலும் பள்ளி வராண்டா பகுதியில் உள்ள சன்சைடு பகுதிகள் அனைத்தும் சேதமடைந்து காரைகள் விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. சேதமடைந்த கட்டிடத்தின் தரை தளத்தில்தான் பள்ளியின் துணை முதல்வர், தலைமையாசிரியர் அறைகள் மற்றும் ஆய்வுக் கூடங்களும் உள்ளன. முதல் தளத்தில் பிளஸ்-1 வகுப்புகளில் 7 பிரிவுகளும் , பிளஸ்-2 வகுப்புகளில் 7 பிரிவுகளும் இயங்கி வருகின்றன. இதில் மட்டும் மொத்தம் 500 மாணவிகள் படிக்கின்றனர். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அதன் அருகிலேயே வேறு கட்டிடத்தில் படிக்கின்றனர்.

சேதமடைந்த கட்டிடம் குறித்து கல்வித்துறைக்கு பல முறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு கட்டிடத்தைப் பழுது பார்க்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது பள்ளியின் வராண்டா பகுதியில் இருந்த 5 பில்லர்கள் புதுப்பிக்கப்பட்டன.

மேலும் சில இடங்களில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூசப்பட்டன. சில வாரங்களே தொடர்ந்த பணி, பின்னர் நிதி பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட பணி இன்று வரையிலும் தொடங்கப்படவில்லை.

தற்போது இடிந்து விழும் தளங்களை மரக்கம்பங்கள் மூலம் முட்டுக்கொடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிக் கட்டிடத்தில் நீர்க் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியின் கட்டிடம் நாளுக்கு நாள் அபாயகரமான நிலைக்கு சென்று வருவதால், மாணவியர்களும், ஆசிரியர்களும் அச்சத்துடன் வகுப்பறையில் அமர்ந்துள்ளனர். பெற்றோரும் அச்சமடைந்துள்ளனர்.

ஏதேனும் விபரீதம் நடைபெறுவதற்கு முன், புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட்டு, உடனடியாக கட்டிடத்தைப் புனரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x