Last Updated : 09 Dec, 2018 10:21 AM

 

Published : 09 Dec 2018 10:21 AM
Last Updated : 09 Dec 2018 10:21 AM

ஏற்காட்டில் பூச்சிகளை உண்ணும் ‘நெப்பந்தஸ் காசியானா’ கொடி: கொடியின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை

தமிழகத்தில் ஏற்காட்டில் மட்டுமே உள்ள பூச்சி உண்ணும் தாவரமான, ‘நெப்பந்தஸ் காசியானா’ கொடியின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்திய தாவர மதிப்பீட்டு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகள் மான்கள், காட்டெருமை உள்ளிட்ட தாவர உண்ணிகளை வேட்டையாடி உண்ணுவதை அறிந்திருப்போம். அதுபோல தாவரத்திலும் அசைவ செடிகள் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான் பூச்சிகளை உண்ணும் தாவரமான, ‘நெப்பந்தஸ் காசியானா’ என்ற கொடி.

தமிழகத்தில் ஏற்காட்டில் மட்டுமே 2 கொடிகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்திய தாவர மதிப்பீட்டுத் துறை தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 1,400 மீட்டர் உயரம் கொண்ட மலைகளில் வளரக்கூடிய இக்கொடிகள் மேகலயா மாநிலத்தின் காசி மலைகளில் ஏராளமாக காணப்படுகிறது.

அதிகமான குளிர் மற்றும் ஈரப்பதம் கொண்ட சூழலில் மட்டுமே வளரக்கூடிய இந்த கொடியானது, தமிழகத்தில் ஏற்காடு, கேரளாவில் உள்ள பாலோடு மாவட்டம் ஆகிய இடங்களில் தாவரவியல் பூங்காக்களில் மட்டுமே காணப்படுகிறது.

இக்கொடியில், இலையின் நுனியில் மூடியுடன் கூடிய ஒரு அடி நீளம் கொண்ட குடுவை போன்ற பை காணப்படும். இந்த குடுவையின் மேல் விளிம்பில் அமரும் சிறு பூச்சிகள், வண்டுகள், எறும்புகள், கொசுக்கள் உள்ளிட்டவை அதில் உள்ள மெழுகு பூச்சு காரணமாக வழுக்கி குடுவையின் உள்ளே விழுந்துவிடும். குடுவையில் ஆழத்தில் உள்ள அமிலம் போன்ற திரவம் பூச்சியினை அரித்து கரைத்துவிடும். இதன்மூலமாக கிடைக்கும் ஹைட்ரஜனை கொடி உணவாக எடுத்துக் கொள்கிறது.

இதுகுறித்து ஏற்காடு இந்திய தாவர மதிப்பீட்டுத் துறை விஞ்ஞானி எஸ்.கலியமூர்த்தி கூறியதாவது:

கடந்த 1990-ம் ஆண்டில் ஏற்காட்டில் மேகலாயாவை போலவே ஈரப்பதமும், குளிர்ச்சியும் இருந்தது. அதனால், அப்போது கொண்டு வரப்பட்ட 2 கொடிகளுமே ஏற்காட்டில் வளர்ந்துவிட்டன. எனினும், 2 கொடிகளுமே பெண் இனம் என்பதால் புதிய கொடியினை உருவாக்க முடியவில்லை. எனவே, கொடியின் தண்டுகளை ஆய்வகத்தில் சுத்திகரிப்பு செய்து, பதியம் மூலமாக வளர்ச்சி பெறச் செய்து 3 ஆண்டுகளில் 5 கொடிகளை உருவாக்கி உள்ளோம். இந்த கொடிகளின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

நெப்பந்தஸ் காசியானாவின் குடுவையில் சிறிய அளவில் தேனும், ஹைட்ரோ குளோரிக் அமிலம் போன்ற செரிவான அமிலமும் 2 மில்லி வரை இருக்கும். இந்த அமிலத்தை பற்களில் ஏற்படும் வலியை போக்குவது தொடர்பாகவும் மருத்துவ துறையினர் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இந்த கொடியானது பூச்சிகளை கவர்ந்திழுக்கும் வகையில் புற ஊதாக்கதிர் போன்ற பூச்சிகளின் கண்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய ஒளியை வெளிப்படுத்துகிறது. இதனால் ஈர்க்கப்பட்டு வரும் பூச்சிகள் குடுவையில் விழுந்து, இந்த கொடிக்கு இரையாகி விடுகின்றன. தாவரவியல் துறையில் இது அரிதான தன்மை கொண்ட செடியாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இவை அதிகமாக காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x