Published : 06 Dec 2018 06:58 PM
Last Updated : 06 Dec 2018 06:58 PM

மேகதாட்டு அணைக்கட்ட கடும் எதிர்ப்பு: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

கர்நாடகாவில் மேகதாட்டு அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், மேகதாது பிரச்சனை தொடர்பாக முன்மொழிந்த தனித் தீர்மானம்:

நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டிற்கு உரிய காவேரி நீர் கிடைக்கும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்த இந்த நேரத்தில், மத்திய நீர்வளக் குழுமம், கர்நாடகத்திலுள்ள மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி அன்று அனுமதி வழங்கிய செயல், நம் அனைவரையும் மிகவும் கொதிப்படைய வைத்திருக்கிறது.

இதை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கடுமையாக எதிர்த்து வருகின்றோம்.  இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தும் வகையில், நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு, நம் உணர்வையும், எதிர்ப்பையும், கண்டனத்தையும், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் அரசு கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை, அவையில் நான் முன்மொழிய விழைகிறேன்.

இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்து அதனை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று தங்கள் வாயிலாக உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இம்மாமன்றத்தில் 2014-ம் ஆண்டு டிச.5 அன்றும், 2015-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ஆகிய நாட்களில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ்படுகை மாநிலங்களின் முன்அனுமதி பெறாமல், கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.

இந்த விதியையும் மீறி, தற்பொழுது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை துவக்க உள்ளதற்கும், மேகதாதுவில் புதியதாக அணை  கட்ட  விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளக் குழுமம் அனுமதி வழங்கியதற்கும்  இம்மாமன்றம்  கடும் கண்டனத்தையும்,  எதிர்ப்பையும்  தெரிவித்துக் கொள்கிறது. 

 மத்திய நீர்வளக் குழுமம்  வழங்கிய அனுமதியை   திரும்பப்பெற அக்குழுமத்திற்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும்  இம்மாமன்றம்  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ, கர்நாடகாவில் உள்ள காவேரி படுகையில், மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x