Published : 06 Dec 2018 06:52 PM
Last Updated : 06 Dec 2018 06:52 PM

பள்ளிவேனை தவறவிட்டதால் பரிதாபம்: சித்தப்பாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி தண்ணீர் லாரிமோதி பலி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பள்ளி வேனை தவறவிட்ட மாணவி உறவினருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற போது இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் பின்னால் வந்த தண்ணீர்லாரி மோதியதில் உயிரிழந்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம், 1-வது தெருவில் வசிப்பவர் நிஜோ. இவரது மகள் ஜெனிமா அச்சு மேத்யூ (12). இவர் கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையிலுள்ள யூனியன் கிறிஸ்டியன் பப்ளிக் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.  வழக்கமாக பள்ளிக்கு வேனில் செல்லும் ஜெனிமா மேத்யூ இன்று தாமதமாக கிளம்பியதால் பள்ளி வேனை தவற விட்டுவிட்டார்.

இதனால் அவரது சித்தப்பா அவரது மகளுடன் ஜெனிமாவையும் ஏற்றிக்கொண்டு மூவரும் ஒரே  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.  நியூ ஆவடி சாலை தாமோதரன் சாலை சந்திப்பில் மூவரும் சென்ற இருசக்கர வாகனம் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தது.

இதில் ஜெனியின் சித்தப்பாவும் அவரது மகள் ஒரு புறமும், ஜெனிமா வலதுபுறமும் சாலையில் விழுந்தனர். இதில் வலதுபுறமாக விழுந்த ஜெனிமா மீது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரியின் பின்சக்கரம்  ஏறியது.

இதில் பலத்த காயமுற்ற மாணவி உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், லாரியை ஓட்டிவந்த திருவள்ளூர் புண்ணியம்கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கோவிந்தராஜை (26) கைது செய்தனர்.

கிறுத்துமஸ் பண்டிகைக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தங்கள் மகளை பறிகொடுத்த பெற்றோர் கதறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x