Published : 06 Dec 2018 06:08 PM
Last Updated : 06 Dec 2018 06:08 PM

குழந்தைகள் தங்கும் விடுதிகளுக்கான புதிய விதிமுறைகள்: மத்திய அரசு முடிவு

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், குழந்தைகள் காப்பகத்திற்கான விதிமுறைகளை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச கவனிப்பு வழங்கும் வகையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் விதிமுறைகளை உருவாக்கவுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் காப்பகங்களைத் தவறாக பயன்படுத்துதல் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சிறார் நீதிச் சட்டம் -2015 பிரிவு 2(14)-ன் கீழ் குழந்தைகளுக்குத் தேவையான கவனிப்பு மற்றும் பாதுகாப்பு என்ற சட்டத்தை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்திருந்தது.  

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள், அரசு அல்லது சமூக நல அமைப்புகளால் உருவாக்கப்பட்ட காப்பகங்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு குறைந்தபட்ச கவனிப்பை வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.

இதன்படி, அமைச்சகம் சிறார் நீதிச் சட்டத்தின்கீழ் வராத அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அமைத்து வருகிறது.

இதுகுறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவிக்கையில்,  “காப்பகங்களில் தங்கும் குழந்தைகள்  மற்றும் பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள விடுதிகளில் தங்கும் குழந்தைகளுக்கும் பிற குழந்தை கவனிப்பு நிறுவனங்கள் மற்றும் பகல் நேரக் காப்பகங்களில் உள்ள குழந்தைகள் போல பாதிப்புக்கு உள்ளாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதனை முன்னிட்டு, காப்பகங்களில் தேவையான பாதுகாப்பு, குறைந்தபட்ச வாழ்வியல் நிலை, தொடர் ஆய்வுகள் ஆகியவற்றை  உறுதி செய்யும் வகையில் விதிமுறைகளை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.  குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தை சம்பந்தப்பட்ட மற்றவர்களுடன் பரிசீலித்து வரைவு விதிமுறைகளை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  இதனைச் சிறார் நீதிச்சட்டத்தின் இந்த விதிமுறைகளை அறிவிக்கையாக வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அதன் சார்ந்த வசதிகள், பதிவு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. சிறார் நீதிச் சட்டம் 2015, பிரிவு 41-ன் கீழ் அரசு உதவிபெறும் அல்லது தனியார் என அனைத்து குழந்தை பாதுகாப்பு நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயமாகும். 

இந்தச் சட்டத்தின் பிரிவு 42-ன் கீழ் பதிவு செய்யாதவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  தங்கும் விடுதியாக செயல்பட்டு வரும்  அனைத்துக் குழந்தைப் பாதுகாப்பு நிறுவனங்களும் இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய்வது கட்டாயமாகும் என்றும் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். 

பள்ளியில் தங்கும் விடுதிகளில் குழந்தைகளின் பாதுகாப்பையும், நலனையும் உறுதி செய்ய மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இந்த விதிமுறைகளை ஹாஸ்டல் வசதி வழங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் சென்றடையும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் சேர்ந்து பகிரவுள்ளது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x