Published : 06 Dec 2018 08:23 AM
Last Updated : 06 Dec 2018 08:23 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20-ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி: நாடு முழுவதும் மே 5-ம் தேதி தேர்வு நடைபெறும்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக ளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது நாளையுடன் முடிவடைகிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் - NEET), அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆன்லைனில் ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) என்ற புதிய அமைப்பு நடத்தும் என்று சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. தேர்வு குறித்த கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆண்டுக்கு இரண்டு முறை, ஆன்லைனில் நீட் தேர்வு நடத்துவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கடந்த ஆண்டைப் போலவே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு அறிவிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் அறிவித்தது. நீட் தேர்வுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை www.nta.ac.in / www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த டிசம்பர் 1-ம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஏப்ரல் 15-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 5-ம் தேதி தமிழகம் உட்பட நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 7-ம் தேதி வரையும் (நாளை), ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த டிசம்பர் 8-ம் தேதி வரையும் (நாளை மறுநாள்) நீட்டிக்கப்பட்டது. இதனால், 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்கள் ஆர்வமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x