Published : 21 Nov 2018 11:52 AM
Last Updated : 21 Nov 2018 11:52 AM

கஜா புயல் பாதிப்பு; சீரமைப்புப் பணிகளின் நிலை என்ன?- புள்ளிவிவரங்களுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளின் நிலை என்ன என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார்.

புதன்கிழமை காலை சென்னையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''465 மீட்பு முகாம்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3,78,533 பேர் அவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 535 மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. 2,716 நடமாடும் மருத்துவக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1,69, 052 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி சாலைகளில் சுமார் 1, 95,277 மரங்கள் விழுந்துள்ளன.  22,658 மரங்கள் நெடுஞ்சாலைகளில் விழுந்துள்ளன. மொத்தத்தில் 2,17,935 மரங்கள் சேதமடைந்துள்ளன. இதில் 91,960 மரங்கள் அகற்றப்பட்டன. மற்ற மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது.

மின் கம்பங்கள் சீரமைப்பு

மின் கம்பங்களைப் பொறுத்த அளவில், 1,03,241 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 13,848 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. 181 துணை மின் நிலையங்கள் கஜா புயலால் சேதமடைந்தன. அதில் 143-ஐ சீரமைத்துள்ளோம்.

53 லட்சத்து 21,506 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதில் 38 லட்சத்து 97 ஆயிரத்து 421 பேருக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 21,461 பேர் மின் துறை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் இணைப்பு

நகராட்சியில் 184 பகுதிகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அவை அனைத்துக்கும் இணைப்பு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகளில் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்ட 270 வார்டுகளில் 252 வார்டுகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் 6,771 பகுதிகளில் நீர் துண்டிக்கப்பட்டிருந்தது. இதில் 5,952 பகுதிகளில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் விழுந்த மரங்களை அகற்ற 410 ஜேசிபிக்கள், 145 கட்டர், 63 லாரிகள், 62 டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புற சாலைகளில் 991 ஜேசிபிக்கள், 2,162 கட்டர், 427 லாரிகள், 387 டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குடிநீர் விநியோகம்

மின்சாரம் இல்லாத பகுதிகளில் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீரை விநியோகம் செய்தோம். மோட்டார் பழுதடைந்த இடங்களில் லாரிகள் மூலமாக நீர் வழங்க முயற்சித்தோம். நகராட்சிகளில் 38 லாரிகள் மூலமும், 33 ஜெனரேட்டர்கள் மூலமும் அளித்தோம். பேரூராட்சிகளில் 23 லாரிகள் மூலமும், 63 ஜெனரேட்டர்கள் மூலமும் அளித்தோம். ஊராட்சிப் பகுதிகளில் 772 லாரிகள் மூலமும், 2,386 ஜெனரேட்டர்கள் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது.

மண்ணெண்ணெய் மற்றும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளை மனித சக்தியே மேற்கொள்கிறது. குறைகள் இருந்தால் அதைக் களைய அமைச்சர்களும் களத்தில் இருக்கிறார்கள்'' என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x