Published : 15 Nov 2018 09:18 PM
Last Updated : 15 Nov 2018 09:18 PM

ஈவேரா, மணியம்மை பற்றி படிக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா?- எச்.ராஜா மீண்டும் சர்ச்சை

தொடர்ந்து திராவிட, இடதுசாரி இயக்கங்களை விமர்சித்து வரும் எச்.ராஜா, பெரியார், மணியம்மை பற்றி பேட்டி அளித்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

பாஜக தேசியச் செயலாளராக பதவி வகிக்கும் எச்.ராஜா அடிக்கடி எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இடதுசாரிகள், திராவிடக் கட்சிகள், பெரியார் குறித்து சர்ச்சையாகப் பேசுவது அவரது வாடிக்கையான பேச்சுகளில் ஒன்று.

தமிழகத்தில் வழக்கமாக பாஜக தலைவர்கள் சர்ச்சையாகப் பேசுவதில்லை. ஆனால் எச்.ராஜாவின் பேச்சு பலமுறை பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் உயர் நீதிமன்றத்தை விமர்சித்து நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகி நீதிமன்றம் தொடர்ந்த சூமோட்டோ வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார்.

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டபோது இதேபோன்று தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று எச்.ராஜா பதிவிட்டு, அதனால் ஏற்பட்ட சர்ச்சையில் தான் பதிவைப் போடவில்லை, எனது அட்மின் பதிவு செய்துவிட்டார் என்று மறுப்பு வெளியிட்டது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் மீண்டும் பெரியாரைப் பற்றி பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் எச்.ராஜா.

அரியலூர் மாவட்டம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு இன்று வந்த எச்.ராஜா, பள்ளிப் பாடப் புத்தகத்திலிருந்து பெரியார், மணியம்மை குறித்த பாடங்கள் நீக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று அவர் அளித்த பேட்டியில், ''ஈவேரா பற்றியும் மணியம்மை பற்றியும் படிக்கும் குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? யோசிக்க வேண்டாமா? ஒரு நீதிபதி கேட்கிறார், பள்ளிக்கூட குழந்தைகள் வயதானவரையும், கல்யாணம் ஆனவர்களையும் ஏன் திருமணம் செய்துகொண்டு போகிறார்கள்?  இதை அரசாங்கம் தடுக்க என்ன செய்திருக்கிறது? என்று கேட்கிறார். இதையெல்லாம் புத்தகத்திலிருந்து எடுத்துவிட்டாலே சரியாகிவிடும் என்கிறேன் நான்'' என்றார் எச்.ராஜா.

எச்.ராஜாவின் இந்தப் பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x