Published : 11 Nov 2018 02:26 PM
Last Updated : 11 Nov 2018 02:26 PM

இலங்கை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம்களும் இணைந்து வியூகம் வகுக்க வேண்டும்: வீரமணி வலியுறுத்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இலங்கையில் சட்ட விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் அதிபர் சிறீசேனா இலங்கையில் ஒரு அரசியல் குழப்ப நிலையை ஏற்படுத்தி விட்டார்; நாடாளுமன்றத்திற்கான தேர்தலையும் சட்ட விரோதமாக அறிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும், சிறுபான்மையான முசுலிம்களும் ஒருங்கிணைந்து சிறிசேனா, இனப்படுகொலையாளன் ராஜபக்சே கூட்டணியை வீழ்த்தி தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலைக்கு உத்தரவாதம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நமது ‘தொப்புள் கொடி உறவான’ தமிழர்கள் பலரும் சிறுபான்மையினராக வாழும் நாடு இலங்கை.அதுபோலவே மற்றொரு சிறுபான்மையினராகிய இஸ்லாமிய சகோதரர்களும் கணிசமாக வாழும் நாடும்கூட இலங்கையே!

இந்த இருசாராரின் வாக்கு ஆதரவினைப் பெற்றே மகிந்த இராஜபக்சே என்ற தமிழர்களைப் படுகொலை செய்த பாதகனை தேர்தலில் வீழ்த்தி, தற்போது அரசியல் ‘பரமபத விளையாட்டு’ விளையாடும் அதிபர் மைத்திரி பாலசிறீசேனா அதிபராகி ஆட்சி அமைத்தார்.

ஆனால் சில வாரங்களுக்கு முன் அவர், திடீரென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கி விட்டு, - தன்னிச்சையாக நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல் லாமலேயே - தனது பழைய நண்பரான மகிந்த ராஜபக் சேவை பிரதமராக - சட்ட விரோதமாக - நியமித்தார்.

இது இலங்கையில் இதற்குமுன் எப்போதுமில்லாத அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் ஜெயசூரியா, நாடாளு மன்றத்தின்ஒப்புதல் இன்றி அதிபர் ரணில் விக்ரம சிங்கேவை பதவி நீக்கம் செய்தது செல்லாது; நாடாளுமன்றத்தைக் கூட்டி ரணில்விக்ரமசிங்கேவுக்கு போதிய ஆதரவில்லா விட்டால் நீக்கலாம் என்று தேதியையும் நிர்ணயித்தார்.

அத்தேதி 7 என்பதைக்கூட நவ.14 என்று அதிபர் மாற்றி அறிவித்தார். மற்றொருவரை சபாநாயகர் என்றும் நியமித்தார் - குதிரை பேரத்திற்காக! தன்னிச்சையாக. வரலாறு காணாத விசித்திரக் குழப்பமாக, இலங்கைக் குடிஅரசில் ஒரே நேரத்தில் இரண்டு பிரதமர்கள்!

இரண்டு சபாநாயகர்கள். இதற்கிடையில் இராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத் தில் ஆதரவு தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியினரைக் கேட்டார் ;அவர்களில் ஒருவரை ராஜபக்சே அமைச்சராகவும் நியமித்தார்; எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சேனாதிராஜா, சுரேந்திரன் போன்றவர்கள் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பினர் எவரும் இந்த ஜனநாயகப் படுகொலைக்குத் துணை போகவில்லை. சிறீசேனாவின் செயலை ஆதரிக்க முடியாது; ராஜபக்சேவைப் பிரதமராக ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

ஆளுங் கட்சி (சிங்கள) அமைச்சர் ஒருவரே அதிபர் சிறீசேனாவின் யதேச்சதிகார முடிவைக் கண்டித்து அதிலிருந்து பதவி விலகினார்! வரும் 14ஆம் தேதி தன்னால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவை ஏற்காமல், நாடாளுமன்றம் நிராகரிக்கும் என்பதை அறிந்து கொண்டு, குதிரை பேரம் வெற்றியளிக்கவில்லை என்பதையும் புரிந்துகொண்டு வெறிகொண்ட வேங்கை, பாய்வதைப் போல, சட்ட விரோதமாக தனக்குள்ள அதிபர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தையே கலைத்து அறிவித்து, அடுத்து இலங்கையில் 2019 ஜனவரி 5ஆம் தேதி அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று பிரகடனப்படுத்தி, தவறுகளின் உச்சக் கட்டத்திற்கே சென்று, ஜனநாயகப் படுகொலையை முழுமைப்படுத்தினார் அதிபர் சிறீசேனா.

இது அப்பட்டமான இலங்கை அரசியல் சட்ட விரோத நடவடிக்கையாகும் (19ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின்படி தவறானது). இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டு நீதி கேட்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை சென்றுள்ளன. நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் செயல் சட்ட விரோதம் என்று அய்க்கிய தேசியக் கட்சியும் கூறியுள்ளது.

2018இல் இலங்கை அரசியல் சட்டத்தின் 19ஆவது அரசியல் சட்டத் திருத்தின்படி இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தை எப்போது கலைக்க முடியும் என்றால், (அ) முதல் நான்கரை ஆண்டுக்கு முன் கலைக்க முடியாது. (2020 வரை இந்த நாடாளுமன்றத்திற்கு ஆயுள் உண்டு)

மற்றும் (ஆ) நாடாளுமன்றம் தாமே முன்வந்து இரண்டு அவைகளிலும் (மேல், கீழ்) மூன்றில் இரு பங்கு வாக்களித்த பெரும்பான்மையோடு - கலைக்கச் சொல்லி அதிபரைக் கேட்டுக் கொண்டால் மட்டுமே அவர் கலைக்க முடியும்.

இந்த அதிபர் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த ஆண்டில் (2018) அதிபர் யதேச்சதிகாரமாக நாடாளு மன்றத்தைக் கலைக்கக் கூடாது என்ற தடுப்பு முறை யாகவே அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது!

அதற்கு நேர் மாறாக அதிபர் சிறீசேனா அப்படியே தலைகீழாக சட்டமுரணாக நடந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நீதிமன்றம் சென்றுள்ளனர்.எப்படியாயினும் மீண்டும் தேர்தல் நடக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

யாழ்ப்பாணம் போன்ற பகுதியில் ஒரு தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சி இருந்தும், சிங்கள இராணுவப் பிடி சற்றும் அங்கு தளரவே இல்லை என்பதும், எந்த அதிகாரமும் தேர்ந்து எடுக்கப்பட்ட அந்த முதல்வருக்கு (விக்னேசுவரனுக்கு) வழங்கப்படவில்லை என்பதும், தெரிந்ததே! ‘பழைய கறுப்பனாகவே!’ நிலைமை அங்கு இருந்தது - தொடர்கிறது.

இதன்மூலம் மத்திய ஆளும் மோடிஅரசின் வெளியுறவுக் கொள்கை இலங்கையைப் பொறுத்து முற்றாகத் தோல்வி அடைந்து விட்டது; சீனாவின் கை ஓங்கி மறைமுக அரசியல் செல்வாக்கினைப் பெற்றது; தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்தால் சீனாவிடம் சென்று இலங்கை தஞ்சம் அடையும் என்ற ஒரு சாக்கு - போலிக் காரணம் கூறப்பட்டது என்பது இப்போது புரிகிறது!

நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இஸ்லாமியச் சிறுபான்மையினரும் சிறந்த வியூகத்தை வகுக்க வேண்டும். போர்க் குற்றவாளியான ராஜபக்சே மீதுள்ள சர்வதேச விசாரணையை நடத்திடவும் உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் முக்கியமாக அய்.நா. மன்றமும் தனது விழிகளை அகலத்திறந்து, தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தரப்பாதுகாப்புகளைஏற்படுத்தும் வகையில், தீர்வுகளைக் காண, புதிய அரசியல் சூழலை நல்ல வண்ணம் ஏற்படுத்திட ஒத்துழைப்பு, கண்காணிப்பு நல்குவது முக்கியம் - அவசரமும்கூட’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x