Published : 11 Nov 2018 12:58 PM
Last Updated : 11 Nov 2018 12:58 PM

நேரு நினைவு இல்லம் தீன்மூர்த்தி பவன் அடையாளத்தை அழிக்க முயற்சி: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

நேரு நினைவு இல்லம் தீன்மூர்த்தி பவன் அடையாளத்தை அழிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் இந்தியாவின் வளர்ச்சியை முன்நிறுத்தி மிகப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி, நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் ஆட்சிப் பீடத்துக்கு வந்தது.

நான்கரை ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் அதலபாதாள வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுக்கு அடங்காமல் சென்றது மட்டுமல்ல, அதற்கான வரி நிர்ணயங்களின் மூலம் 11 இலட்சம் கோடி ரூபாய் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு மத்திய அரசின் கருவூலத்துக்குச் சென்றிருக்கிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகளின் இந்து ராஷ்டிரா கனவை செயல்படுத்துவதற்கு மோடி அரசு நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து வருகிறது. குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றங்கரையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில் 597 அடி உயரத்தில் உலகிலேயே மிகப் பெரிய சிலையை பிரதமர் மோடி எழுப்பி இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா கூட்டத்தின் செயல்பாடுகளுக்கு இணக்கமான அணுகுமுறை கொண்டிருந்தார் படேல் என்பதை மறக்க முடியாது. அதனால்தான் பா.ஜ.க. படேல் அவர்களைக் கொண்டாடுகிறது.வல்லபாய் படேலுக்கு எழுப்பப்பட்டுள்ள சிலை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பரிவாரங்களின் உண்மையான நோக்கத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது.

மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மாநிலம் என்பதை மாற்றி, “படேல் பூமி” என்று சித்தரிப்பதன் மூலம் தேசப்பிதா காந்தி அடிகளின் புகழை திரையிட்டு மறைக்கலாம் என்று சங் பரிவார் கும்பல் மனப்பால் குடிக்கிறது. இமயம் நிகர்த்த புகழ் ஈட்டிய காந்தி அடிகள், கோடானு கோடி மக்களின் நெஞ்சில் வாழ்கிறர். உலகம் முழுவதும் காந்தியத்தின் வேர்கள் பரவி இருக்கின்றன.

நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் சிறைவாசத்தை ஏற்று, உன்னதமான தியாகத்தைச் செய்து உலகத் தலைவர்களின் வரிசையில் இடம்பெற்ற பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் கீர்த்தியையும் புகழையும் அழிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங் பரிவாரங்கள் முனைந்து நிற்கின்றன.

நவீன இந்தியாவை கட்டி அமைத்த நேரு உருவாக்கிய ‘திட்டக் குழு’வை ஒழித்துக்கட்டி, ‘நிதி ஆயோக்’ எனும் ஒற்றை அதிகார அமைப்பை பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த உடனேயே அமைத்தது.

‘ஆசியாவின் ஜோதி’ என்று கொண்டாடப்பட்ட ஜவஹர்லால் நேரு நாட்டின் முதல் பிரதமராக 17 ஆண்டு காலம் பொறுப்பில் இருந்தபோது, வசித்த ‘தீன் மூர்த்தி பவனின்’ அடையாளத்தை அழிக்கும் முயற்சியில், நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைந்துள்ள தீன் மூர்த்தி பவன் வளாகத்தை அனைத்துப் பிரதமர்களுக்கான நினைவு இல்லமாக மாற்ற மோடி அரசு திட்டமிட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் செயல்பட்டவருமான சக்தி சின்காவை நேரு அருங்காட்சியகத்தின் நிர்வாக இயக்குநராகவும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ஊதுகுழலாக தொலைக்காட்சி நடத்தி வரும் அர்னாப் கோஸ்வாமியை நிர்வாகக்குழு உறுப்பினராகவும் நியமனம் செய்து தனது நோக்கத்தை செயல்படுத்த பா.ஜ.க., அரசு துடிக்கிறது.

ஜவஹர்லால் நேருவின் புகழை அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. அரசு, தீன்மூர்த்தி பவன் அடையாளத்தை அழிக்கும் முயற்சி, நாட்டு மக்களின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டும் எதேச்சாதிகார நடவடிக்கை ஆகும். எக்காரணம் கொண்டும் நேரு நினைவு இல்லமான தீன்மூர்த்தி பவனில் மாற்றங்கள் செய்யக்கூடாது‘‘ என வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x