Published : 10 Nov 2018 09:05 PM
Last Updated : 10 Nov 2018 09:05 PM

பாலாற்று தடுப்பணை பற்றி சந்திரபாபு நாயுடுவுடன் ஸ்டாலின் ஏன் பேசவில்லை?- முதல்வர் பழனிசாமி

சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து கூட்டணி அமைக்கும் ஸ்டாலின், பாலாற்றில் சந்திரபாபு நாயுடு கட்டிய தடுப்பணைகள் பற்றி ஏன் கேட்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:

தொகுதிப் பணிகள் முடங்கியுள்ளதாக டிடிவி தினகரன் அணியினர் கூறுகிறார்களே?

யாரால் முடங்கி இருக்கிறது. இவர்கள் 18 பேரால்தான் முடங்கி இருக்கிறது. ஜெயலலிதா அரசுக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு இறைவன் தண்டனை கொடுத்துள்ளார். அவர்கள்தான் துரோகிகள். 18 தொகுதிகளிலும் பணி நடக்கிறது.

வெற்றிச்சின்னம் இரட்டை இலைச்சின்னம் துரோகிகள் சின்னமாகி விட்டது என்று டிடிவி தினகரன் சொல்கிறாரே?

அவரே துரோகிதான். அதிமுகவிற்கு முதல் துரோகி டிடிவி தினகரன் தான். இந்த இயக்கத்தை உடைக்கவேண்டும் என்று எதிரிகளுடன் சேர்ந்து சதி செய்து கொண்டிருக்கிறார்.

7 பேர் விடுதலை என்ன ஆயிற்று?

7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு ஆளுநரின் கையில்.

ஸ்டாலின் மதவாத பாஜகவை வீழ்த்தவேண்டும் என்று பேட்டி அளித்துள்ளாரே?

அவர்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது, இவர்கள் அவ்வப்போது பச்சோந்தி மாதிரி நிறம் மாறக்கூடியவர்கள். முதலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள். அப்போது பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றார்கள். இப்போது பாஜகவை தீண்டத்தகாத கட்சி, மதவாதக் கட்சி என்று சொல்கிறார்கள்.

சந்திரபாபு நாயுடுவும் அப்படித்தான். 4.5 ஆண்டுகள் பாஜகவுடன் அமைச்சரவையில் இருந்துவிட்டு அனுபவித்துவிட்டு இப்போது தேர்தல் வரும்போது மாறிவிட்டார். அவர்கள் பச்சோந்தி போன்றவர்கள்.

நாங்கள் அப்படி அல்ல. எங்கள் கொள்கையில் பிடிப்போடு இருக்கிறோம். 2014-ல் ஜெயலலிதா தலைமையில் தனியாக நின்று 37 இடங்களைப் பெற்றோம். தமிழகத்துக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் நாங்கள் உறவு வைப்போம்.

மத்தியில் தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகளை வாதாடிப் பெற்று வருகிறோம். தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்காக மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம்.

இவ்வளவு பேசும் ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு பக்கத்தில்தானே நின்றிருந்தார், பாலாறு தடுப்பணை பிரச்சினை குறித்து கேட்டிருக்க வேண்டியதுதானே. பாலாறில் 20 தடுப்பணைகள் கட்டியுள்ளனர். வடமாவட்டங்களில் நீராதாரமாக இருப்பது பாலாறுதான். சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் போது இது குறித்து ஏதேனும் பேசினாரா?

இவர்களுக்குப் பதவிதான் முக்கியம், தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலை கிடையாது. அவர்களுக்குத் தேவை அதிகாரம் மட்டும்தான்.

'சர்கார்' பட பேனர்களை அதிமுகவினர் கிழித்தார்களே?

அதிமுகவினர் கிழித்தார்கள் என்ற தவறான தகவல் வேண்டாம். பொதுமக்களும் சேர்ந்து தங்கள் எதிர்ப்பைக் காட்ட கிழித்தார்கள்.

அதிமுக கட்சியில் இருப்பவர்கள் பேட்டி அளித்தார்களே?

அதாவது அந்தந்த தலைவர்கள் கொண்டுவந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும்போது, அவமானப்படுத்தும்போது தன்மானமுள்ள தொண்டன் கொதித்தெழுவான்.

தலைமைச் செயலக வழக்கில் திமுக தடை ஆணை கேட்பது ஏன்? மடியில் கனம் இல்லை என்றால் தைரியமாக வழக்கை எதிர்கொள்ள வேண்டியது தானே? ஏன் ஒவ்வொரு தடவையும் போய் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

விமர்சனத்தை எதிர்கொள்ளாத அரசு கவிழும் என்று கமல் சொல்கிறாரே?

கமலுக்கு 64 வயது ஆகிவிட்டது. 64 வயது வரை படத்தில் நடித்துவிட்டு ரிட்டையர் ஆகிவிட்டார். அங்கு ஓய்வு கொடுத்து விட்டார்கள், மக்களும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது இங்கே வந்து அரசியலில் நாடகம் நடித்துக்கொண்டிருக்கிறார், அரசியலிலும் நடிக்க வருகிறார். அரசியலில் அது எடுபடாது.

திரைப்படத்திலேயே 40 ஆண்டுகாலம் நடித்து அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தபோது இந்த அரசியலில் வந்தா அவர் நடிப்பு எடுபடப் போகிறது?

'சர்கார்' பிரச்சினை குறித்து நடிகர் ரஜினி விமர்சித்துள்ளாரே?

'சர்கார்' பிரச்சினை சுமுகமாக முடிந்துவிட்டது; மேலும் மேலும் ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x