Published : 09 Nov 2018 10:25 PM
Last Updated : 09 Nov 2018 10:25 PM

தமிழ்நாட்டில் நடப்பது ‘ரிமோட் ஆட்சி’: சந்திரபாபு நாயுடு கிண்டல்

தமிழகத்தில் எங்கே ஆட்சி இருக்கிறது? ரிமோட் ஆட்சிதானே நடக்கிறது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கிண்டலடித்தார்.

சென்னையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பின் சந்திரபாபு நாயுடு கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

''ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. அதைப் பாதுகாக்கும் பொருட்டு திமுக தலைவர் ஸ்டாலினை, சந்தித்து பாஜகவுக்கு எதிரான அணியில் இணைய வேண்டுகோள் வைத்தேன். அரசு நிறுவனங்களையும், அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாகப் போயுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டு 2 ஆண்டுகள் நேற்றுடன் முடிந்துள்ளது. அதன் விளைவுகளை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் நமது மதிப்பிற்குரிய நிதியமைச்சர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த அல்ல, வரிவசூலை அதிகப்படுத்ததான் கொண்டுவரப்பட்டது என்று சுவாரஸ்யமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கறுப்புப் பணம் அனைத்தும் வெள்ளையாக மாற்ற இந்த நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. இதில் யார் பயனடைந்திருப்பார்கள் என்று தெரியும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கி ஊழியர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். நிரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோர் நாட்டை விட்டுத் தப்பிவிட்ட்டார்கள்.

ஆனால், வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கு மக்களிடம் பெற்ற டெபாசிட் பணத்தை பங்குகளாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு இருந்தால் வங்கியில் யார் முதலீடு செய்வார்கள்.

வாராக்கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை காணப்படுகிறது. விவசாயிகள் வேதனையில் இருக்கிறார்கள். வேலையின்மை அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் களையப்பட வேண்டும். நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்கிற நோக்கில் நான் அனைவரையும் சந்தித்து வருகிறேன்.

அடுத்து வரும் நாட்களில் மம்தா பானர்ஜியைச் சந்திக்க உள்ளேன். பல வேறுபாடுகளை மறந்து ராகுல் காந்தியுடன் நடந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. அவருடன் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளேன். கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் சந்தித்தேன். தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கும் எனக்கும் நீண்டகால நட்பு இருந்தது அனைவருக்கும் தெரியும்.

திமுகவுடனும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடனும் எனக்கு நல்ல நட்புறவு இருந்தது. அனைவரும் ஒரே தளத்தில் நின்று பாஜகவுக்கு எதிராக தேர்தலில் களமிறங்க இந்த சந்திப்புகள் நடந்துள்ளது. நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும்''.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சந்திரபாபு நாயுடு பதிலளித்தார்.

உங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை எப்படி களைவீர்கள்?

எங்கள் அணிக்குள் பல்வேறு கருத்துகள் இருக்கலாம்.  முதலில் அனைவரும் ஒன்று சேரவேண்டும். அதன்பின் கருத்து வேறுபாடுகள் களையப்படும். இப்போதுள்ள நிலையில் நாட்டு நலன், ஜனநாயக நலன் முக்கியம். அதற்காக ஒன்று சேர வேண்டும்.

ஆறு மாதத்துக்குள் கூட்டணியை அமைத்துவிடுவீர்களா?

மக்கள் தயாராக இருக்கிறார்கள். பணமதிப்பு நீக்க நேரத்தில் உங்கள் பணத்தை உங்களால் எடுக்க முடிந்ததா? எவ்வளவு மோசமான பொருளாதார நிலை நீடித்தது நீங்கள் அறியாததா? அது அனைவரையும் ஒன்று சேர்க்கும்.

உங்கள் கூட்டணிக்கு யார் தலைவராக இருப்பார்?

எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தலைவர் பதவிக்கு வரத் தகுதியானவர்கள்தான். மோடியைக் காட்டிலும் ஸ்டாலின் சிறந்த தலைவர்தான். ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சிறந்த தலைவர் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அரசைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இங்கு எங்கே அரசு இருக்கிறது. ரிமோட் மூலமாகத்தானே ஆட்சி நடக்கிறது.

ராகுல் காந்தி கூட்டணிக்குத் தலைவராக இருக்க தகுதியானவரா?

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர். மிகப்பெரிய தேசியக்கட்சியான காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் வலிமையான தலைவர்கள் இருக்கிறார்கள். கர்நாடகாவில் தேவகவுடா, ஆந்திராவில் என் தலைமை, தமிழகத்தில் ஸ்டாலின், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஒன்று சேரும்போது கூட்டணி வலுவடையும்.

கர்நாடகம் - தமிழகம் இடையே கடந்த காலத்தில் பிரச்சினைகள் இருந்தன. ஆந்திராவுக்கும் இருந்தது. அதை எப்படி தீர்ப்பீர்கள்?

அனைத்து மாநிலங்களிடையேயும்பிரச்சினை உள்ளது. அதை நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம். இப்போதுகூட ஸ்டாலினைச் சந்திக்கும்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினோம். ஸ்டாலின் கேட்டுக்கொண்டால் கிருஷ்ணா நதி நீரை சென்னை மக்களுக்காக வழங்குவோம். எதிர்காலத்தில் கோதாவரி நீரை வழங்கக்கூட இணைந்து செயல்படுவோம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x