Published : 17 Oct 2018 07:33 PM
Last Updated : 17 Oct 2018 07:33 PM

ஸ்டாலினின் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவரை மீட்டு சிகிச்சைக்கு உதவி; காலிழந்த நிலையில் செயற்கை கால் உதவி

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் அருகே விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதும் அல்லாமல் 5 மாதங்களாக சிகிச்சைக்கு உதவி செய்து தற்போது காலிழந்த அவருக்கு செயற்கை காலையும் சொந்த செலவில் வழங்கியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதிக்கு அடிக்கடி சென்று பார்வையிட்டு மக்களுக்கான தொகுதிப் பணியை நிறைவேற்றி வருகிறார். ஸ்டாலின் கொளத்தூருக்கு மட்டும் தலைவரல்ல என்று சட்டப்பேரவையில் ஒருமுறை ஜெயலலிதா சுட்டிக்காட்டும் அளவுக்கு தொகுதியில் அக்கறை காட்டுபவர்.

இவ்வாறு கடந்த மே மாதம் 7-ம் தேதி தனது தொகுதியான கொளத்தூர் பகுதிக்குச் சென்றுவிட்டு பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் மக்கள் கூட்டமாக கூடியிருப்பதைப் பார்த்து அங்கு சென்று பார்த்தார்.

அங்கு இருசக்கர வாகனத்தில் பயணித்த செல்வராஜ் என்பவர் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. உடனடியாக தன்னுடன் வந்த தொண்டர்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆட்டோ ஒன்றில் ஏற்றி காயம்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உடன் தொண்டர்களும் மருத்துவமனை சென்றனர்.

அத்துடன் தனது பணி முடிந்தது என்று போய்விடாமல் மீண்டும் ஒருமுறை நேரில் சென்று காயம்பட்டவரைப் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளையும் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். ஏறத்தாழ 5 மாதங்கள் கடந்த நிலையில் செல்வராஜின் காயங்கள் ஆறின. ஆனால் அன்று நடந்த விபத்தில் செல்வராஜின் வலது காலைத் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.

செல்வராஜ்தான் குடும்பத்திற்கு ஆதாரம். அவர் கால் துண்டிக்கப்பட்டதால் முன்போல் அவரால் உழைக்க முடியாத நிலை ஏற்பட்டதை கருத்தில் கொண்ட ஸ்டாலின் கால் இழந்த செல்வராஜுக்கு செயற்கை கால் பொருத்த உதவி செய்தார். நேற்று செல்வராஜ் இல்லத்திற்குச் சென்ற ஸ்டாலின் அவருக்கு செயற்கை காலை வழங்கினார்.

செயற்கை கால் பொருத்தப்பட்ட செல்வராஜ் சாதாரணமாக தனது பணியை இனி மேற்கொள்ளலாம். அரசியல் பணியினூடே விபத்தில் சிக்கியவரை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு அடுத்த பணியை பார்க்காமல் 5 மாதங்களாக அவரது சிகிச்சைக்கு உதவியும், செயற்கை கால் பொருத்த உதவி செய்ததற்கு செல்வராஜின் குடும்பத்தார் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x