Published : 17 Oct 2018 04:08 PM
Last Updated : 17 Oct 2018 04:08 PM

இனி வாழ்க்கையில் பெண் இயக்குனர்களையே வேலைக்கு எடுக்க மாட்டேன்: சுசி கணேசன்

லீனா மணிமேகலை கூறிய பாலியல் புகாரை அடுத்து அவர்மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்த இயக்குனர் சுசி கணேசன் இனி வாழ்க்கையில் பெண் இயக்குனர்களை பணிக்கு வைக்கமாட்டேன் என்று தெரிவித்தார்.

2005-ம் ஆண்டு ஒரு விழாவில் தொகுப்பாளராக பங்கேற்ற தன்னை வீட்டில் விடுவதாக காரில் ஏற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை ‘மீடூ’ பரப்புரையில் குற்றம் சாட்ட உடனடியாக செய்தியாளர்களை சந்தித்த சுசி கணேசன் அதை மறுத்தார்.

அரைமணி நேர சந்திப்பில் ஒருவரின் காரில் ஏறும் அளவுக்கா ஒரு பெண் இருப்பார் இதிலிருந்தே அவர் கூறுவதில் உண்மை இல்லை என்னிடம் சொகுசு கார் இல்லை. காரையும் நான் ஓட்டுவதே இல்லை.

ஆகவே அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அவர் குற்றச்சாட்டு கூறிய பின்னர் 3 மாதம் கழித்து என்னுடைய புத்தக அறிமுக விழாவுக்கு எப்படி தொகுப்பாளராக இருந்தார் என்று சுசி கணேசன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இன்று சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“மீடூவை தவறாக பயன்படுத்தும் நிலை உள்ளது. மீடூ-வில் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களுக்கு நடந்த கொடுமைகளை வெளிக் கொண்டுவரும் விஷமாக இருக்கவேண்டுமே தவிர பயமுறுத்தும் விஷயமாக இருக்கக்கூடாது. சத்தியமாக என் வாழ்க்கையில் இனி பெண் உதவி இயக்குனரையே பணிக்கு வைத்துக்கொள்ள மாட்டேன் அந்த அளவுக்கு பயம் காட்டிவிட்டார்கள், மீடூவால் பெண்களுக்கு வேலை கிடைப்பதிலேயே சிக்கல் ஏற்படும். இந்த விவகாரத்தில் நியாயம் கேட்டு முதன்முதலில் நான்தான் வெளியே வந்துள்ளேன்.

இந்த வழக்கை விரைந்து முடிக்க விரும்புகிறேன். இதற்காக வழக்கில் வாய்தாவே வாங்கமாட்டேன். விரைந்து இந்த வழக்கை முடிக்க ஒத்துழைப்பேன். இதேபோன்று உயர் நீதிமன்றத்திலும் அவதூறு வழக்கு தொடுப்பேன். நான் நேர்மையானவன் என்பதை இந்த உலகுக்கு உணர்த்துகிறேனோ இல்லையோ? என் குடும்பத்தினருக்கு உணர்த்துவதற்காகவாவது நான் இதில் போராட உள்ளேன்.

என் குடும்பத்தினர் இப்போதும் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இருந்தாலும் இதில் என் போராட்டம் தொடரும்.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x