Published : 16 Oct 2018 11:21 AM
Last Updated : 16 Oct 2018 11:21 AM

நதிநீர்ப்படுகை மேலாண்மை சட்ட முன்வரைவு: தனியாரிடம் குடிநீருக்கு கையேந்த வேண்டிய நிலை வரும்; வைகோ எச்சரிக்கை

நதிநீர்ப்படுகை மேலாண்மை சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டால், தனியாரிடம் குடிநீருக்கு கையேந்த வேண்டிய நிலை வரும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மாநிலங்களுக்கு இடையிலான ஆற்று நீர் பகிர்வு தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண, அரசியலமைப்புச் சட்டத்தின் 262 ஆவது பிரிவின் கீழ் 1956 ஆம் ஆண்டு, மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்ப்பூசல் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தின் விதி 3(சி), தண்ணீரைப் பயன்படுத்த, வழங்க அல்லது கட்டுப்படுத்த ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த விதிகளைச் செயல்படுத்த ஒரு மாநிலம் தவறினால் பாதிக்கப்படும் மாநிலம் இச்சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயத்தின் முடிவுக்குவிடுமாறு மத்திய அரசைக் கோரலாம்.

மேலும் இச்சட்டத்தின் விதி 4(1)-ன் கீழ் மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர்ப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்கக முடியாது என்று மத்திய அரசு கருதினால், இதில் தீர்வு காண தீர்ப்பாயம் ஒன்றை மத்திய அரசு அமைத்து, அதன் உத்தரவை அரசு இதழில் வெளியிட்டுச் செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவில் பல மாநிலங்களில் உருவான நதி நீர் பிரச்சினைகள், 1956 ஆம் ஆண்டு சட்டப்படி, தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுத்தான் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. கிருஷ்ணா தீர்ப்பாயம், நர்மதை தீர்ப்பாயம் போன்றவற்றை முன்மாதிரியாகக் கொண்டு காவிரி நடுவர் மன்றமும் அமைக்கப்பட்டது.

தற்போது மத்திய பாஜக அரசு 1956 ஆம் ஆண்டு நதி நீர் பூசல் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக நதிநீர்ப்படுகை மேலாண்மைச் சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு, வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஒரு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முனைந்துள்ளது.

இச்சட்டத்தின் கீழ் மொத்தம் 13 நதிநீர்ப் படுகை ஆணையங்கள் அமைக்கப்படும். காவிரி, கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா, மகாநதி, கிருஷ்ணா, தபதி உள்ளிட்ட 13 ஆறுகள் நதி நீர்ப்படுகை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.

நதிநீர்ப்படுகை மேலாண்மைச் சட்ட முன் வரைவு விதி(i)-ன் கீழ் உருவாக்கப்படும் நதிநீர்ப்படுகை ஆணையம், மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள், ஆற்றுப்படுகைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கும், மேலாண்மை செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் அதிகாரம் பெற்றதாக இருக்கும்.

இச்சட்ட விதி 20 இன் கீழ் நதிநீர்ப்படுகை ஆணையத்தின் முடிவுகள், மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்று கூறுகின்றது.

1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்ப்பூசல் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களின் உத்தரவுகள் அனைத்தும் புதிதாக அமைக்கப்படும் நதிநீர்ப்படுகை ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படும். இந்தத் தீர்ப்புகளைச் செயல்படுத்த இந்த ஆணையமும், நிர்வாக வாரியம் ஒன்றை அமைக்கும்.

இதன்படி, தற்போது காவிரி ஆற்று நீர் பங்கீட்டுச் சிக்கலில் அமைக்கப்பட்டுள்ள குறைபாடுகள் கொண்ட காவிரி ஆணையம், ஒழுங்காற்றுக்குழு ஆகியவை செயலற்றதாக ஆக்கப்பட்டு, காவிரி ஆற்றுக்காக ஒரு புதிய ஆணையம் அமைக்கப்படும். தண்ணீர்ப்பகிர்வு பிரச்சினை எழுமானால் தொடர்புடைய மாநிலங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பாஜக அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நதிநீர்ப் படுகை மேலாண்மைச் சட்டம் முழுக்க முழுக்க காவிரிப் பிரச்சினையில் பல ஆண்டுகளாக தமிழகம் போராடிப் பெற்ற சட்ட ரீதியிலான உரிமைகளையும் தட்டிப் பறிப்பதோடு, மீண்டும் தொடக்கப் புள்ளியிலேயே கொண்டு போய் நிறுத்திவிடும் ஆபத்தும் எழுந்துள்ளது.

புதிய சட்ட முன்வரைவு, அத்தியாயம் 4 இல் நதிநீர்ப்படுகை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தேசியப் பெருந்திட்டம் ஒன்று அமைக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கின்றது. அதன்படி மாநில ஆறுகளும், தண்ணீரும், ஆறு - ஏரி - குளம் - குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.

இதன் மூலம் மாநிலங்களின் உரிமை பறிபோவதோடு ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீராதாரங்களின் கட்டுப்பாடும், மேலாண்மை செய்யும் அதிகாரமும் மத்திய அரசுக்குச் சென்றுவிடும்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்த ‘தேசிய நீர் சட்ட வரைவு -2016’, நீர் மேலாண்மையை தனியாருக்குத் தாரை வார்த்து, வணிக நோக்கமாகக் கொண்டுள்ளது.

மதிமுக புதிய தேசிய நீர்க் கொள்கையை கடுமையாக எதிர்த்தது.

ஆனால் தற்போது, ‘தேசிய நீர் சட்ட முன்வரைவு -2016’ இன் கீழ் உள்ள கூறுகளை உள்ளடக்கி, நதிநீர்ப்படுகை மேலாண்மைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முனைந்திருப்பது கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானதும், கடும் கண்டனத்துக்கு உரியதும் ஆகும்.

இயற்கையின் கொடையான தண்ணீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை ஆகும். இதனைப் பறித்து, தனியாரிடம் நீர்ப்பாசனத்திற்கும், குடிநீருக்கும் கையேந்த வேண்டிய நிலையை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனவே மத்திய அரசு நதிநீர்ப்படுகை மேலாண்மை சட்ட முன்வரைவைத் திரும்பப்பெற வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x