Published : 15 Oct 2018 07:35 PM
Last Updated : 15 Oct 2018 07:35 PM

தமிழிசைக்கு பதற்றம் ஏன்?- கமல் கேள்வி

கல்லூரி விழாக்களில் மாணவர்களுடன் உரையாடக்கூடாது என தமிழிசை கூறுவது அவரது பதற்றத்தை காட்டுகிறது என கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

கமல்ஹாசன் கல்லூரிகளில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். கல்லூரி விழாக்களில் பேசுவதன் மூலம் மாணவர்கள் அரசியலில் பங்கேற்பதை வரவேற்கிறார். கமல்ஹாசன் கல்லூரிகளில் பேசுவதை தமிழிசை கண்டித்துள்ளார்.

“எம்.ஜி.ஆருடன் கமல்ஹாசனை ஒப்பிடுவது வேடிக்கையானது. எம்.ஜி.ஆருடன் எந்த நடிகர், அரசியல்வாதிகளையும் ஒப்பிட்டுக்கொள்ள முடியாது. அவருடைய பண்பு எந்த நடிகருக்கும் வராது.

கமல்ஹாசன் கல்லூரிகளில் அரசியல் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். கல்லூரி மாணவர்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு அரசியல் கற்றுகொடுக்கக்கூடாது. கல்லூரி மாணவர்களிடம் அரசியல் செய்யக்கூடாது.” என்று தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.

இதே கருத்தை வைத்து நடிகர் கமல்ஹாசனிடம் தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் மடக்கி மடக்கி கேட்க அதற்கு கமல்ஹாசன் விரிவாக பதிலளித்தார். அவரது பேட்டியில்:

கல்லூரிகளை கமல்ஹாசன் பயன்படுத்துகிறாரா? தவறாக வழிநடத்துகிறாரா?

கல்லூரிகளில் அரசியல் பேசப்பட வேண்டும் என்பது என்னுடைய தீரா ஆசை. அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. நல்ல மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்பட்டபோதெல்லாம் கல்லூரி மாணவர்கள் அரசியல்பற்றி சிந்தித்துள்ளனர்.அவர்களை தவறாக வழிநடத்துவது என்பதற்கான பேச்சுக்கே இடமில்லை.

கல்லூரிகளே அரசியல் களமாக மாறலாமா?

அதாவது கல்லூரியில் அவர்கள் படிக்கவேண்டும். படித்த நேரம்போகத்தான் நான் பேசுகிறேன். கல்லூரியில் கலை நிகழ்ச்சி வேண்டுமா? என்று கேட்டாலும் இதே மாதிரியான பதில்தான் வரும். அவர்களுக்கு எல்லாவற்றைப்பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு பன்முகத்தன்மையான வடிவம் அவர்களுக்கு வேண்டும் என்பதற்காகத்தான் விளையாட்டு, விவாதம், கலை, மொழி போன்ற வாய்ப்பு தரப்படுகிறது. அதே வாய்ப்புத்தான் அரசியல் தரப்படவேண்டும் என்று கூறுகிறோம்.

அவர்கள் வாழ்க்கையில் ஸ்போர்ட்ஸ் விளையாடுகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக அரசியலை எதிர்கொள்ள நேரிடும். கண்டிப்பாக அதற்கான தயாரிப்பை அவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாளையே அனைத்துக்கட்சிகளும் கல்லூரி நோக்கி படையெடுத்தால் கல்லூரியில் பாடம் நடக்குமா? அடிதடி நடக்குமா?

படையெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அவர்கள் அனுமதி இல்லாமல் அங்கு போக முடியாது. எத்தனைபேர் வரணும் எப்போது வரணும் என்று அவர்கள்தான் முடிவெடுக்கணும், ஆனால் ரகசிய சுற்றறிக்கை அரசே அனுப்பி, நடிகர்களை கல்லூரிக்கு அழைக்கக்கூடாது,  அரசியல் பேச யாரையுமே அழைக்காதீர்கள் என்று போட்டுவிட்டு அதற்கு அடுத்த நாளே முதல்வர் போய் ஒரு கல்லூரியில் பேசுகிறார். அங்கும் அரசியல் பேசுகிறார்.

முதல்வராக ஆசைப்படும் நீங்கள் அனைவரும் மாணவர்களிடம் சென்று அரசியல் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் படிப்பது எப்போது?

தினமும் காலையிலிருந்து மாலைவரை பேசினால் தப்பு. என்றைக்கோ ஒருநாள் வெள்ளிக்கிழமை பேசுகிறார்கள் அதை தப்பில்லை என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். இதனிடையே தமிழிசை கூறியது குறித்த கேள்விக்கு கமல் இன்று விமான நிலையத்தில் பதிலளித்துள்ளார். அவரது பதில்:

மாணவ மாணவிகளை சந்திக்கக்கூடாது என தமிழிசை கூறுகிறாரே?

எனக்கு மாணவர்களுக்கும் நடக்கும் உரையாடலை யாரும் தடுக்க முடியாது. தமிழிசை அவர்களின் பதற்றம் என்னவென்று எனக்கு புரிகிறது. மாணவர்களுடனான உரையாடல் அற்புதமான உரையாடல், ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான உரையாடல். அதனால் தான் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x