Published : 25 Sep 2018 08:52 PM
Last Updated : 25 Sep 2018 08:52 PM

கருணாஸின் எம்.எல்.ஏ பதவிப் பறிப்பா?- அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்

அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி கருணாஸ் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் கருணாஸ் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்தாகத்தான் முடியும் என்கிற பொருளில் பதிலளித்துள்ளார்.

நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி ஐபிஎஸ் அதிகாரி ஒருவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வரம்பு மீறி பேசியதால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமூகங்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசுவது, முதல்வரை அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல் என பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை ஒத்தைக்கு ஒத்தை யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா என்று அழைத்ததும், காலை உடை என தொண்டர்களிடம் பேசியதும், கொலையே செய்தாலும் என்னிடம் சொல்லிவிட்டு செய் என்று பேசியதும், ஊடகங்கள் இரண்டு குறிப்பிட்ட சமூகத்தினரிடையேதான் உள்ளது என்று பேசியதும் சர்ச்சையானது.

முதல்வரைப்பற்றிய சர்ச்சைப்பேச்சும், அவரது சமூகம் குறித்துப் பேசியதும் சிக்கலை ஏற்படுத்தியது. போலீஸார் வழக்குப் பதிவு செய்தபின்னர் கைது செய்யச் சென்றபோது தான் ஒரு எம்.எல்.ஏ, சபாநாயகருக்குத் தெரிவிக்காமல் கைது செய்வதாக கருணாஸ் பேசினார். ஆனால் கிரிமினல் குற்றங்களில் கைதுக்குப் பின் சபாநாயகருக்கு அதற்கான காரணங்களுடன் கூற வேண்டும். அதை போலீஸார் செய்துவிட்டனர்.

அரசுக்கு எதிராகப் பேசிய கருணாஸ் இருப்பது டிடிவி தினகரன் அணியில். ஆனால் அவரது சர்ச்சைப் பேச்சை டிடிவியே ரசிக்கவில்லை. ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் எப்படி பேசக்கூடாது என்பதற்கு இது உதாரணம் என்று தெரிவித்திருந்தார். மேலும் அரசுக்கு எதிராக கருணாஸின் செயலை அரசு வேடிக்கை பார்க்காது என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போது கருணாஸின் எம்எல்ஏ பதவியையும் பறிக்கும் சூழல் உருவாகியுள்ளதை அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பால் தாக்கரே இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி அவரது ஓட்டுரிமை பறிக்கப்பட்டது.  ஆகவே கருணாஸ் பதவிக்கும் ஆபத்தான சூழல் உள்ளது என பொருள்படும்படி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

சென்னை சாந்தோமில் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:

“ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. அத்தகைய பொறுப்பில் தனது கடமை உணர்வை மறந்து நடப்பது தவறு.

அரசியல் அமைப்புச்சட்டப்படி பதவி ஏற்றுக்கொள்பவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்கவேண்டும், அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது. பொதுவாக பதவி ஏற்கும்போது அமைச்சராக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும்சரி அவர் பதவி ஏற்கும்போது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு இருப்பேன் என்ற உறுதியோடுதான் பதவி ஏற்கிறோம்.

அதைக் கட்டாயம் கருணாஸ் கடைபிடிக்கவேண்டும். எனவே இந்தப் போக்கு போகும்போது அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியே கேள்விக்குறிதான் என்பது தற்போது வெளிப்படுகிறது. சட்ட வல்லுநர்கள் அனைவரும் என்ன சொல்கிறார்கள் என்றால் ஏன் கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர வேண்டும் என்று கேட்கிறார்கள்.

பால் தாக்கரே ஒரு வழக்கில் இதுபோன்ற பேச்சால் உச்ச நீதிமன்றம் தெளிவாக வழங்கிய தீர்ப்பில் அவரது ஓட்டுரிமை பறிக்கப்பட்டது. அவர் ஓட்டே போட முடியவில்லை. நிச்சயமாக இதுபோன்ற பேச்சு பேசுபவர்கள் எல்லாம் இதுபோன்ற நிலை இருந்தால்தான் வாயை மூடிக்கொண்டு அவர்களது சட்டப்பேரவை உறுப்பினர் கடமையை ஆற்றுவார்கள்.

பால்தாக்கரே வழக்கை ஒப்பிடும்போது நிச்சயமாக கருணாஸின் பதவி ஆபத்தில்தான் முடியும் என்கிற கருத்தும் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.”

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x