Published : 25 Sep 2018 07:00 PM
Last Updated : 25 Sep 2018 07:00 PM

மேலும் இரண்டு வழக்குகளில் கருணாஸ் கைது?- காவலில் எடுத்து விசாரிக்க மனு

முதல்வர் மற்றும் காவல் அதிகாரியை விமர்சித்து கைது செய்யப்பட்ட கருணாஸை மேலும் இரண்டு வழக்குகளில் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

நடிகர் கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின் பேரில் தி.நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உத்தரவின் பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடத்தினார்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் தனது சமுதாயப் பெருமையை பெரிதாகப் பேசிய கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவியைப் பற்றியும் அவர் தான் அடித்து விடுவேன் என்று தன்னைப் பார்த்து பயப்படுவதாகவும் பேசினார்.

பின்னர் தனது ஆட்களின் பிரதாபங்களைப் பேசிய கருணாஸ், ''நீங்கள் எல்லாம் ஒரு ஆளை கொலை பண்ண வேண்டும் என்றால் பத்து ஆட்களை சேர்த்துக்கொண்டு குடித்துவிட்டு இரவு முழுவதும் திட்டமிட்டு பின்னர் கொலை செய்வீர்கள். நாங்கள் தூங்கி எழுந்து பல் தேய்க்கும் நேரத்தில் செய்துவிடுவோம்'' என்று சர்ச்சையாகப் பேசினார்.

பின்னர் ஒரு நாளைக்கு குடிப்பதற்கே ரூ.1 லட்சம் செலவு செய்வதாகத் தெரிவித்த அவர் கொலை செய்வதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுச் செய் என்று தொண்டர்களைப் பார்த்துப் பேசினார். பின்னர் தனது ஆட்களின் காலை ஒடி, கையை ஒடி என்று உத்தரவிட்டால் அந்த உத்தரவிட்டவன் காலை ஒடி என்று பேசினார்.

பின்னர் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர், ''உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச்சட்டையைக் கழற்றிவிட்டு வா பார்த்துக்குவோம்'' என்று திரும்பத் திரும்பப் பேசினார். நான் நினைத்திருந்தால் யூனிபார்மை கழற்றியிருப்பேன் என்றெல்லாம் பேசினார்.

இதையடுத்து அவரைக் கைது செய்ய கண்டனக் குரல் எழுந்தது. கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொலைமுயற்சி (307), உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 307 வது பிரிவு மட்டும் நீக்கப்பட்டது. பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் வேலூர் சிறையில் உள்ள கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். கோடம்பாக்கம் ஏரியாவில் நடக்கும் பைனான்ஸ் பிரச்சினைகள், கூவத்தூர் விவகாரம், அரவிந்தன் டிசியை இவ்வாறு பேசக்காரணம், மாநிலம் முழுவதும் கருணாஸுக்கு உள்ள தொடர்புகள் போன்றவை குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து கருணாஸை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீஸார் சென்னை எழும்பூர் 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்காக அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கருணாஸை நாளை சென்னை அழைத்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாஸுக்கு போலீஸ் காவல் கேட்கப்பட்டுள்ளதால் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை எடுக்கப்படாது. இதனால் போலீஸ் காவல் முடிந்த பின்னரே கருணாஸ் ஜாமீன் கோர முடியும். தற்போது அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, கருணாஸின் இயக்கம், வேல்முருகனின் கட்சி தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தப்போராட்டத்தில் ரசிகர்கள் தாக்கப்பட்டனர், போலீஸார் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது. இந்தப் போராட்டத்தில் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கருணாஸும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கு 1 : சட்டவிரோதமாக கலகம் விளைவிக்கும்நோக்கத்துடன் கூடுவது(146) உயிரைப் பறிக்கும் ஆயுதங்களுடன் கூடுவது(148), ரசிகர்களைச் சட்டவிரோதமாக தடுத்தல் (341), அதிகாரிகளின் உத்தரவை மீறிச் செயல்படுவது (188) மற்றும் தடை செய்யப்பட்ட இடத்தில் கூடுவது 41(6)mcp act

வழக்கு 2: சட்டவிரோதமாக ஒன்றுகூடி செயல்படுவது (147), 148, ரசிகர்களை சட்டவிரோதமாகத் தடுத்தல் (341), ஆபாசமாகப் பேசுதல் 294(b), காயம் ஏற்படுத்துவது (323), ஆயுதத்தை வைத்து காயம் ஏற்படுத்துவது (324), கொலை முயற்சி (307), ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல் 506(ii)

ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கருணாஸ்  9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கிலும் அவரைக்  கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

307-வது பிரிவை நீக்கச் சொல்லி நுங்கம்பாக்கம் போலீஸார் தொடர்ந்த வழக்கில் கருணாஸ் தரப்பு வெற்றி பெற்றாலும், ஐபிஎல் வழக்கில் 307- வது பிரிவு அவர் மீது பாய்கிறது. இதன் மூலம் கருணாஸுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லாத நிலையை உருவாக உள்ளதாக போலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x