Published : 22 Sep 2018 10:47 AM
Last Updated : 22 Sep 2018 10:47 AM

‘குறைந்தபட்ச கட்டணம் ரூ.5’ என்ற வாசகத்துடன் சென்னையில் சாதாரண பேருந்துகள் இயக்கம்: பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க போக்குவரத்து கழகம் திட்டம்

சென்னை நகரில் சாதாரண கட்டண பேருந்துகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ‘குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் மற்றும் விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணம் கடந்த ஜனவரி 20-ம் தேதி உயர்த்தப்பட்டது. இதன்படி குறைந்தபட்ச கட்டணத்தில் ரூ.1 உயர்த்தப்பட்டு, சாதாரண பேருந்துகளில் அடிப்படைக் கட்டணம் ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சொகுசு, விரைவு பேருந்துகளில் ரூ.7 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.12-ல் இருந்து 19 ஆகவும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் 30 கிமீட்டருக்கு ரூ.17 ஆக இருந்த கட்டணம் ரூ.24 ஆகவும் உயர்த்தப்பட்டது.

கட்டண உயர்வுக்குப்பின், வெள்ளை போர்டு கொண்ட சாதாரண பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. போக்குவரத்துக் கழகம் இதை மறுத்து வந்தது. இதனால், போக்குவரத்துக்கழக பேருந்துகளின் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தற்போது டீசல் விலை உயர்ந்து வருவதால், போக்குவரத்துக் கழகங்கள் கூடுதல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகியது. இருப்பினும் பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ, கால்டாக்சிகள் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. எனவே, பொதுமக்கள் அரசு பேருந்தை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், சாதாரண பேருந்துகளை பொதுமக்கள் எளிதில் கண்டறியும் வகையில், புதிய ஏற்பாட்டை போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகரில் தினசரி 3,300 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இவற்றில் சராசரியாக 33 லட்சம் பேர் பயணிக்கின்றனர். கடந்த ஜனவரியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 6 லட்சம் பயணிகள் பேருந்து பயணத்தை தவிர்த்தனர். இதனால் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் குறைந்தது. இந்நிலையில் தற்போது டீசல் விலை தினசரி உயர்ந்து வருவதால், ஷேர் ஆட்டோக்கள், கால் டாக்சிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், பயணிகள் பலர் பேருந்துகளை நாட ஆரம்பித்துள்ளனர். கடந்த 4 நாட்களாக தினசரி 70 ஆயிரம் பயணிகள் கூடுதலாக அரசு பேருந்துகளை பயன்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலும் இவர்கள் சாதாரண பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். அதே நேரம், சாதாரண பேருந்துகளை கண்டறிவதில், குறிப்பாக இரவு நேரத்தில் கண்டறிவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். இந்த குறையை போக்கும் விதமாக, எளிதில் பேருந்துகளை கண்டறிய வசதியாக, சென்னையில் 1,100 சாதாரண பேருந்துகளில் ‘குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5’ என்ற வாசகம் இன்று (நேற்று) முதல் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணிகள் சாதாரண கட்டண பேருந்துகளை எளிதாக கண்டறிய முடியும். பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மேலும், அமைச்சர் அறிவித்துள்ளபடி, சென்னையில் விரைவில் 80 பேட்டரி பேருந்துகள் சென்னையில் ஓடவிருக்கிறது. 20 பேருந்துகளை கோவையில் இயக்கவும் போக்குவரத்துத் துறை திட்டமிட்டு, இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.டீசல் விலை தினசரி உயர்ந்து வருவதால், ஷேர் ஆட்டோக்கள், கால் டாக்சிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், பயணிகள் பலர் பேருந்துகளை நாட ஆரம்பித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x