Published : 21 Sep 2018 12:30 PM
Last Updated : 21 Sep 2018 12:30 PM

அமைச்சர் தங்கமணி குறித்து முகநூலில் அவதூறு: அதிமுக முன்னாள் பெண் எம்எல்ஏ கைது

அமைச்சர் தங்கமணியை முகநூலில் அவதூறு செய்ததாகவும், வட்டச்செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போது திமுகவில் இருக்கும் சரஸ்வதியை போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் முல்லை நகரில் வசிப்பவர் சரஸ்வதி (50). இவர் கபிலர்மலை சட்டப்பேரவைத் தொகுதியில் 1991-96-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவாக செயல்பட்டார். திருச்செங்கோடு நகர்மன்றத்தலைவராகவும் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2016-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் தனக்கு போட்டியாளரான அமைச்சர் தங்கமணியை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சரஸ்வதி தனது முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் அமைச்சர் தங்கமணி பற்றி அவதூறாக பதிவு செய்ததாக அவரது ஆதரவாளர்கள் புகார் அளித்திருந்தனர்.

இது குறித்து கேள்வி எழுப்பிய தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சரஸ்வதி மீது அதிமுக கீரம்பூர் ஊராட்சி கிளை செயலாளர் ராஜா என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து 294(b), 504, 505(1)(b), 506(ii). கொலை மிரட்டல், அவதூறாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடுதல், பொதுக்களிடம் தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நாமக்கல் போலீசார், சரஸ்வதியை இன்று காலை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x