Published : 21 Sep 2018 12:11 PM
Last Updated : 21 Sep 2018 12:11 PM

கருணாஸ் தலைமறைவு- காவல்துறை: தலைமறைவா நானா?- கருணாஸ் சவால்

எஸ்.வி.சேகர், எச்.ராஜா விவகாரத்தை தொடர்ந்து கருணாஸ் விவகாரத்திலும் காவல்துறை தீவிரமாக தேடுவதாக கூறிவரும் நிலையில் என்னை யாரும் கைது செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் எஸ்.வி.சேகர் பெண்பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பதிவிட்டார். இதற்கு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதில் அவர்மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் வழக்குத்தொடரப்பட்டது. அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அவரை கைது செய்ய போலீஸார் தேடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் பொதுவெளியில் சாதாரணமாக உலவினார். அவரது முன் ஜாமீனை மறுத்த உயர் நீதிமன்றம் அவரை ஏன் கைது செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியது. சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேட்டி அளித்தனர். கடைசிவரை போலீஸ் கைது செய்யவில்லை.

புதுக்கோட்டையில் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், டிஜிபியையும், காவல்துறையையும் கடுமையாக நேரடியாக போலீஸ் அதிகாரிகளிடமே பேசியது வீடியோவில் வைரலானது.

உயர் நீதிமன்றம் அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. அவர்மீது திருமயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடியதாக கூறப்பட்ட நிலையில் வேடசந்தூரில் ‘இங்குதான் இருக்கு சிங்கம்’ என்று அவர் கலந்துக்கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசினர்.

இந்நிலையில் தி.நகர் துணை ஆணையர் அரவிந்தனை யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா ஒத்தைக்கு ஒத்தை என்றும் முதலமைச்சரே நான் அடித்துவிடுவேன் என்று பயப்படுகிறார் என்றும் கருணாஸ் பேசிய காணொலி வெளியாகி பரபரப்பானது. அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பலபிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படை அமைத்து கைது செய்ய ஆயத்தமாகினர். இது தவிர ஐபிஎல் போராட்ட வழக்குகளும் தூசித்தட்டி எடுக்கப்பட்டது.

அவரைப்பிடிக்க போலீஸார் சென்றதாகவும் அவர் தலைமறைவானதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நான் எங்கேயும் போகவில்லை, நான் ஏன் தலைமறைவாக போகிறேன் என்று தனது பேட்டியை நியாயப்படுத்தி ஊடகங்களுக்கு கருணாஸ் பேட்டி அளித்துள்ளார்.

எஸ்.வி.சேகர், எச்.ராஜா கதை போலத்தான் இதுவும் என்று நெட்டிசன்கள் கிண்டலடிக்க அதே போன்று இந்த விவகாரத்திலும் தனிப்படை என்றெல்லாம் பரபரப்பூட்டிய போலீஸார் எந்த கைது நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வழக்கம் போல் அமைச்சர்கள் சட்டம் கடமையைச் செய்யும் என பேட்டி அளித்து வருவது வலைதளங்களில் நெட்டிசன்களால் கிணடலாக விமர்சிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x