Published : 20 Sep 2018 06:39 PM
Last Updated : 20 Sep 2018 06:39 PM

பேரறிவாளன் வாங்கித் தந்த பேட்டரி தான் பெல்ட் குண்டு செய்யப் பயன்பட்டதா? - அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கால் முதலில் பாதிக்கப்பட்டவள் நான் தான் என, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்தச் சம்பவத்தின் போது இறந்தவர்களின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவைத் திருத்தி, 3 வாரத்திற்குப் பிறகு புதிதாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், “பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குழு போன்று செயல்படுகிறார்கள். இந்த வழக்கால் நானும் பேரறிவாளனும் தான் முதலில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டோர் பட்டியலில் என் பெயரே இல்லை. எனக்கு அதுதான் வருத்தம். என் மகன் மற்றும் என்னுடைய வாழ்க்கையே போய்விட்டது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தாங்க முடியாத துயரம் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்த வழக்கில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்தார்களா? எங்களுக்குப் பொருளாதாரச் செழிப்பு இல்லை. இருந்தாலும், சட்ட ரீதியாகப் போராடுகிறோம்.

உண்மை குற்றவாளி யார் எனத் தெரியவில்லை என்று என் மகனே வழக்கு தொடுத்திருக்கிறான். என் மகன் வாங்கி தந்த 9 வோல்ட் பேட்டரி தான் பெல்ட் குண்டு செய்யப் பயன்பட்டது என்பதை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. குண்டு தயாரித்தவர் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டிக்சன். அவரை விசாரிக்க அனுமதியே கிடைக்கவில்லை. இந்த வழக்கால் நான் தான் முதலில் பாதிக்கப்பட்டவள். எழுவர் விடுதலையை எதிர்க்குமாறு தாங்கள் நிர்பந்திக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சிலர் சொல்கின்றனர்” என அற்புதம்மாள் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x