Published : 20 Sep 2018 02:30 PM
Last Updated : 20 Sep 2018 02:30 PM

முத்தலாக் சட்டம் இஸ்லாமியப் பெண்களின் சிக்கலைத் தீர்க்காது: ராமதாஸ்

முத்தலாக் முறையைத் தடை செய்ய மத்திய அரசு பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம் இஸ்லாமியப் பெண்களின் சிக்கலைத் தீர்க்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இஸ்லாமியப் பெண்களின் திருமண உறவைப் பாதுகாப்பதற்காக முத்தலாக் முறையைத் தடை செய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தைப் பாதுகாக்க மத்திய அரசின் அவசரச் சட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது.

இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமைக்கு எதிராக முத்தலாக் முறை அமைந்திருந்தது என்பதில் ஐயமில்லை. அதனால் தான் முத்தலாக் முறையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு ஏற்ற கருவி அல்ல. இது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானதாகவே அமையும்.

மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தின்படி முத்தலாக் கூறி இஸ்லாமியப் பெண்களுடனான திருமண உறவை முறித்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. இது பிணையில் வெளிவரக்கூடிய குற்றம் தான் என்றாலும் கூட, காவல் நிலையத்தில் பிணை பெற முடியாது; நடுவர் நீதிமன்றத்திற்குச் சென்று தான் பிணை பெற முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த அம்சங்கள் இஸ்லாமிய இணையரிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக பிணக்கைப் பெருக்கி விடும். அவ்வாறு பிணக்கு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க வழியின்றி போய்விடும். அத்தகைய சூழலில் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியத்தை எவ்வாறு காக்க முடியும்?

இஸ்லாமியர்களிடையே தலாக் -இ- பாயின் என்ற மணமுறிவு முறை நடைமுறையில் உள்ளது. அது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. ஆனால், மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தில் தலாக் -இ- பாயினும் தண்டனைக்குரிய குற்றமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது குடிமை ஒப்பந்தம் என்றும் அத்தகைய ஒப்பந்த மீறலுக்கு சிறைத் தண்டனை விதிப்பது முறையல்ல என்றும் இஸ்லாமியத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகளில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த நாட்டிலும் முத்தலாக் என்பது தண்டனைக்குரியக் குற்றமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது இந்தியாவில் மட்டும் அதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பது ஏன்?

இஸ்லாமியரின் சமூக, கலாச்சார, பண்பாட்டு நடைமுறைகளை மதிக்கும் வகையில் தான் இந்தியாவில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது; இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியமும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் முத்தலாக் தடை தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளிடம் கலந்து பேசி ஒருமித்த கருத்தை உருவாக்கிய பிறகே எந்த ஒரு சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக மத்திய அரசு தன்னிச்சையாக பிறப்பித்துள்ள இந்த அவசரச் சட்டம் இஸ்லாமியப் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக நிலைமையை மேலும், மேலும் மோசமாக்கவே வகை செய்யும்.

பாமகவைப் பொறுத்தவரை இஸ்லாமியப் பெண்களின் திருமண உறவை முறிக்கப் பயன்படுத்தப்படும் முத்தலாக் முறை தடை செய்யப்பட வேண்டும்; அதேநேரத்தில் அது தண்டனைக்கு உரிய குற்றமாக இருக்கக்கூடாது. மாறாக கைவிடப்படும் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம், கவுரவம், வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் தான் இஸ்லாமியப் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் வகுக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டத்தை ரத்து செய்து விட்டு, இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்துடன் ஆலோசனை நடத்தி புதிய சட்ட முன்வரைவை உருவாக்கி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x