Published : 19 Sep 2018 09:49 PM
Last Updated : 19 Sep 2018 09:49 PM

எச்.ராஜாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கருணாஸ்: ஐபிஎஸ் அதிகாரிக்கு மேடையில் பகிரங்க மிரட்டல்

எடப்பாடி பழனிசாமியே நான் அடித்துவிடுவேன் என்று பயந்தார் என்று பேசிய கருணாஸ் கூவத்தூரை அடையாளம் காட்டியவனே நான்தான் என்று பேசி அதிர்ச்சியூட்டினார்.

வட மாநில அரசியல்வாதிகளை மிஞ்சும் விதமாக சமீப காலமாக தமிழக அரசியல்வாதிகள் பேசிவருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பரபரப்புக்கு சொந்தக்காரராக விளங்கியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அவர் ஓய்வை எட்டிய நிலையில் எச்.ராஜா சமீபகாலமாக கண்டபடி மேடையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் காவல்துறையையும், நீதித்துறையையும் கடுமையாக விமர்சித்த எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அரசியல்வாதி பரபரப்பாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். தி.நகர் துணை ஆணையர் அரவிந்தனை கடுமையாக ஏக வசனத்தில் பேசினார் கருணாஸ். நான் யார் தெரியுமா? இங்கு போராட்டங்கள் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி சென்றுள்ளேன் என்னையே போராட வைத்துவிட்டாய் என்று ஆரம்பித்தார்.

அவரது உரையின் சில பகுதிகள் வருமாறு:

என் போராட்டத்திற்கு இங்கு வந்துள்ள வாகனங்கள் 50 அந்த அளவுக்கு என் மீது பற்றுக்கொண்ட என் ஆட்கள் இங்கு வந்துள்ளார்கள். இங்கு ஒட்டுமொத்த முக்குலத்தோருக்கும் தலைவன் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். எனக்குத் தெரியும் என் நிலை.

குறுகிய நேரத்தில் இவ்வளவு இளைஞர்களை திரட்டிய இயக்கம் எனது இயக்கம். எனக்கு தனிப்பட்ட முறையில் காவல்துறை மீது மரியாதை உண்டு. அவர்கள் பிரச்சினை குறித்து எனக்கு தெரியும். இங்கே பிரச்சினை என்னவென்றால் ஒரு தனி நபர், ஐபிஎஸ் அரவிந்த். அவரிடம் நாங்கள் பொறுமையாகப் போக காரணம் தமிழ் படித்த ஐபிஎஸ் என்கிற மரியாதை.

மற்றபடி ஜாதி அது எல்லாம் கிடையாது. எங்களிடம் அதை எதிர்ப்பார்க்காதே. எங்களுக்கு அதுப்பற்றி எல்லாம் கவலையே கிடையாது. பொறுத்தார் பூமியாள்வார் என்று பொறுமையாக இருக்கிறோம். இங்குள்ள ஜேசி அன்பு அவருக்கு இருக்கும் பண்பு உங்களுக்கு ஏன் இல்லை.

சாமி, சிங்கம் என்று பார்த்துவிட்டு நடக்கிறாய். கூலிங்கிளாஸ் போட்டு பத்து பேரை வைத்து சுற்றினால் மனதில் ஜமீந்தார் என்று நினைப்பா? உங்களைப்போல நானும் பப்ளிக் சர்வண்ட் தான். எலக்‌ஷன்ல நின்று பார்.. 3 லட்சம் பேர்கிட்ட ஓட்டு கேட்டு ஜெயித்துப்பார்.

சின்னப்பையன் வயசு கம்மி, தமிழ் ஆளு நல்லா வரணும்னு நாங்க நினைக்கிறோம். நீ இவனுங்கள கத்தியை காட்டி காசு வாங்கினான்னு சொல்கிறாய். ஒரு நாள் சரக்குக்கே நாங்க ஒரு லட்சம் செலவு செய்கிறவர்கள். வர்றவன் போறவனுக்கு பிரியாணி ஆக்கிப்போடவே நாங்க அவ்வளவு செலவு செய்துக்கொண்டு இருக்கிறோம்.

வரலாறு எனக்கு பேசத் தெரியும். சட்டமன்றத்திலேயே பேசினவன் தான் நான். இந்த கருணாஸ் இல்லாம, சின்னம்மா இல்லாமத்தான் இந்த அரசு உருவானதா? எங்க ஆளு வக்கீலு கட்டப்பஞ்சாயத்து செய்கிறான்னு சொல்கிறீர்கள்.

ஒருத்தனை பிடித்தால் அவனை கையைக்காலை ஒடி என்று டிசி வடபழனி ஏசியிடம் சொல்கிறார். நான் இப்போது சொல்கிறேன் எங்க ஆளுங்க மேல கைய உடைக்கிறேன் காலை ஒடிக்கிறேன்னு வேலை வைத்தால் அவன் காலை உடைக்கணும். பார்த்துக்கொள்ளலாம்.

என்ன மானங்கெட்டுப்போய் வாழணுமா? இது நாடகம் எல்லாம் கிடையாது. உங்கள் மீது மரியாதை இருக்கு. உங்களுக்கு அதிகாரம் இருக்கு. ஒரு அதிகாரி தவறு செய்தால் உயர் அதிகாரிகள் கூப்பிட்டு நடவடிக்கை எடுங்கள். ஏன் அனைவரும் ஒத்து போகிறீர்கள்.

அந்த அதிகாரி செய்த செயலுக்கு அவருக்கு பதவி போயிருக்கும், நான் நினைத்திருந்தால் யூனிபார்மை கழற்றியிருப்பேன். ஒரு ஐபிஎஸ் செய்யாத செயலை செய்தவர் இந்த அரவிந்த். நான் ஏன் விட்டேன் ஒரு தமிழ்ப்படித்த அதிகாரி என்பதால் விட்டேன்.

நான் இதுவரை ஒரு 75 பிரிவின் கீழ் கூட வழக்கு வாங்கியவன் இல்லை. சுய கட்டுப்பாடு இருக்கணும்னு நினைக்கிறவன் நான். தற்போது ஒன்றிரண்டு பேர் எங்கள் இயக்கத்தில் சில தப்பு செய்துள்ளார்கள். அது எனக்கு பிடிக்காது. நான் பொதுச்செயலாளரிடம் சொல்லிவிட்டேன் இது எனக்கு ஒத்துவராது என்று. நீ கொலை கூட பண்ணு என்கிட்ட சொல்லிட்டு பண்ணு என்பேன். ஜாதி ரீதியான கொலைகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

ஒரு அதிகாரி செய்கிற தவறுக்கு எப்படி ஒட்டுமொத்த காவல்துறையும் பொறுப்பாகும். எனக்கு அரவிந்த் டிசி மீது நடவடிக்கை எடுக்கணும். அதுவும் உடனடியாக எடுக்கணும். அவர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கவேண்டியதை நான் வேண்டாம் என்று சொன்னவன்.

நேர்மையான அதிகாரின்னு சொல்கிறார்கள் என்று தடுத்தவன். ஆனால் இப்போது கேட்கிறோம். என்ன ஈகோ இது,  ஈகோவில்தானே நடக்கிறது. நானா நீயா என்று பார்க்கிறீர்களா? காக்கிச்சட்டையை கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் பார்த்துக்கலாம். அந்த அதிகாரம் தானே, திமிர்தானே உங்களுக்கு. இதுமாதிரி சொசைட்டியில் உள்ள எங்களை கையை காலை உடை என்று சொன்னால் அப்ப சாதாரண மக்களை என்னவெல்லாம் செய்வாய் நீ.

கோர்ட்டில் மிரட்டுகிறார் என்று உண்மையைச்சொன்னால் கையை உடை காலை உடை என்றால் என்ன அர்த்தம். இந்த பிரச்சினை யாரிடம் செல்கிறது. எல்லாம் சுற்றி எங்கே போகிறது. கடைசியில் அரசாங்கத்தைப்பற்றித்தான் பேசணும்.

எடப்பாடியைப்பற்றித்தான் பேசணும். தேவர் ஜெயந்திக்கு வர்றாருன்னு சொன்னாங்க, ஐயா இடத்துக்கு வர்றாருன்னு மரியாதை கொடுக்கணும்னு நின்றுக்கொண்டிருந்தால் 100 போலீஸை திடீரென சுற்றி பாதுகாப்புக்கு போடுகிறார்கள்.

கேட்டால் நீங்கள் முதல்வரை மறிக்கப்போகிறீர்கள், அடிக்கப்போகிறீர்கள் என்பதால் பாதுகாப்புன்னு சொல்றாங்க. பாருங்க முதல்வரே நான் அடிப்பேன்னு பயப்படுகிறார். ஆனால் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தேன். என்னை பிடிக்காவிட்டால் கண்டபடி ரிப்போர்ட் போடுவதா? உளவுத்துறை அதிகாரியைப்பார்த்து கேட்கிறேன். இது பாவமில்லையா?

ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவன் நான், சபாநாயகரால் பாரட்டப்பட்டவன். நான் மற்றவர்கள் போல் அப்படி இப்படின்னும் வாய் சவடால் அடிப்பவன் அல்ல. ஆனால் செய்யணும்னு நினைத்தால் செய்துவிடுவேன். யாருக்கும் எதிரானவர்கள் அல்ல நாம், அந்த எண்ணத்தையும் மனதில் வளர்த்துக்கொள்ளாதீர்கள்.

தயவு செய்து என் தம்பிகள் மீது வழக்குப்போடாதீர்கள். வழக்கையெல்லாம் நாங்கள் பார்த்தவர்கள். அதற்காக சட்ட விரோத தொழில் செய்ய நினைப்பவர்கள் அல்ல நாங்கள். அவ்வளவு கேவலமானவர்கள் அல்ல நாங்கள்.

எங்கள் மீது வழக்கு போடுவதாக இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள். கத்தியைக் காட்டி கருணாஸ் மிரட்டினார் என்று போடுங்கள். நான் கத்தியை காட்ட வேண்டாம். கொடுடா என்றால் கொடுத்துவிடுவான்.

சும்மா இருப்பவனை கூட்டி வந்து காலை உடைப்பேன் கையை உடைப்பேன்னு போலியாக எழுதி வாங்குவது. மறுநாள் கோர்ட்டில் உண்மை தெரியும்போது ஜட்ஜ் ஏன் இப்படி செய்கிறீர்கள் திட்டுகிறார்கள். அதிகாரம் இருக்கக்கூடிய அதிகாரிகள் தங்களது பண்பாடு, பண்பை மறந்து நடக்கலாமா?

ஒரு ஐபிஎஸ் இப்படி நடக்கலாமா? உங்கள் எண்ணங்கள் எவ்வளவு மேன்மையாக இருக்கணும். திருடனோ, ஒரு கொள்ளைக்கூட்டக்காரனோ அப்படி இருப்பவனை நீங்கள் கூப்பிட்டு திருத்தணும். அவனிடம் அன்பா பேசி ஏன் இப்படி செய்கிறாய் என்று திருத்தணும். ஆனால் அதை விட்டு விட்டு நீங்கள் பொய்க்கேசு போட்டால் சமுதாயம் எப்படி நன்றாக இருக்கும்?

ஆகவே ஒரு தனிப்பட்ட அதிகாரி மோசமாக நடப்பதால் அவரை அழைத்து திருத்துங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம். மற்றபடி தனிப்பட்ட பகை இல்லை. நான் காவல் நிலையத்தில் எந்த காலத்திலும் பஞ்சாயத்து செய்ததில்லை.

அடிச்சுட்டு ஒரு பிரச்சினை ஆச்சுன்னா ஓடி ஒளியாதே என்று சொல்லியிருக்கிறேன். அடிக்கிற தைரியம் இருந்தால் வழக்கையும் ஏற்றுக்கொள்ளணும் என்றுதான் சொல்லி வைத்துள்ளேன். இறுதியாக சொல்கிறேன் இது தொடரணும்னு அரவிந்தன் நினைத்தால் அதை சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு பேசிய கருணாஸ் மேலும் சில கோரிக்கைகளையும் அரசுக்கு வைத்தார். காவல்துறையை குறிப்பாக ஒரு ஐபிஎஸ் அதிகாரியைப்பற்றி கருணாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக போலீஸாரை, உயர் அதிகாரிகளை மேடைப்போட்டு அல்லது பொதுவெளியில் விமர்சிக்கலாம் என்கிற கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. நேர்மையற்ற அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கைகோர்க்கும்போது நேர்மையான அதிகாரிகளையும் அவ்வாறே அவர்கள் பார்க்கிறார்கள். விமர்சிக்கிறார்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x